இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ரஜினிகாந்த், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோருடன் அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

கூலி வசூல் எவ்வளவு?

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகிய இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இருப்பினும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லாமல் கிடைத்து வருகிறது. உலகளவில் ரூபாய் 500 கோடியை கடந்துவிட்டதாக தகவல் வெளியாகி வரும் சூழலில், இந்தியாவில்  முதல் வாரத்தில் மட்டும் ரூபாய் 229.65 கோடியை வசூல் செய்தது. 

தற்போது வரை படம் வெளியாகி கடந்த 12 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரஜினிகாந்தின் கூலி ரூபாய் 260.6 கோடியை வசூல் செய்துள்ளது. தமிழில் மட்டும் ரூபாய் 168.35 கோடியும், இந்தியில் 32.8 கோடியும், தெலுங்கில் ரூபாய் 56.9 கோடியும், கன்னடத்தில் ரூபாய் 2.55 கோடியும் வசூல் செய்துள்ளது.

இன்று மீண்டும் எகிறுமா?

இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் கூலி படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால்,  இன்று விடுமுறை நாள் என்பதால் பலரும் திரையரங்கிற்கு ஆர்வத்துடன் செல்வார்கள். தற்போது திரையரங்குகளில் வேறு ஏதும் புதிய படம் வராத சூழலில் கூலி படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று படக்குழு எதிர்பார்க்கிறது. 

உலகளவில் படம் ரூபாய் 500 கோடியை கடந்திருந்தாலும், இந்தியாவில் இன்னும் 300 கோடி ரூபாய் வசூலை படம் கடக்கவில்லை. அடுத்த சில நாட்களுக்கு பெரிய படங்கள் ஏதும் வெளியாகாமல் உள்ள சூழலில், கூலி படம் ஓரளவு வசூலை மேலும் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தெலுங்கில் நல்ல வரவேற்பு:

படத்தில் அதிகளவு ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இருந்த காரணத்தால் இந்த படத்திற்கு ஏ சான்றிதழை படக்குழு வழங்கியது. இதனால், குடும்பத்துடன் சென்று ரஜினிகாந்தின் கூலி படத்தைப் பார்ப்பதில் சவால் எழுந்தது. இதுவும் படம் எதிர்பார்த்த வசூலை எட்ட முடியாததற்கு ஒரு காரணமாக அமைந்தது. 

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதாரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. ஆனாலும், வசூலில் எந்த தொய்வும் இல்லாமல் படம் சென்று கொண்டிருக்கிறது. தெலுங்கில் நாகர்ஜுனாவின் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.