இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடந்த மாதம் 14ம் தேதி வெளியான படம் கூலி. சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியான இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது.
300 கோடியை அடித்த கூலி:
லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், அமீர்கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். ஆக்ஷன் படமாக வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும், பெரிய படங்களின் வெளியீடு இல்லாத காரணத்தால் படம் தொடர்ந்து வசூலை குவித்து வந்தது.
இந்த நிலையில், கூலி படம் வெளியாகிய 18 நாட்களில் இந்தியாவில் மட்டும் 300 கோடிக்கும் மேல் வசூலை கடந்துள்ளது. கூலி படம் எந்தெந்த மாநிலத்தில் எத்தனை கோடி வசூலை குவித்துள்ளது? என்பதை கீழே காணலாம்.
எந்த மாநிலத்தில் எத்தனை கோடி?
தமிழ்நாடு - ரூபாய் 143.85 கோடி
ஆந்திரா, தெலங்கானா - ரூபாய் 68.67 கோடி
கர்நாடகா - ரூ.44.66 கோடி
கேரளா - ரூ.24.62 கோடி
இந்தியாவின் இதர பகுதிகள் - ரூ. 48.8 கோடி
கடந்த 18 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூபாய் 330.6 கோடியை கூலி படம் வசூலித்துள்ளது.
படம் வெளியாகி ஒரு சில நாட்களில் உலகம் முழுவதும் கூலி ரூபாய் 400 கோடியை வசூல் செய்ததாக படக்குழுவான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனாலும், பல இடங்களில் ஹவுஸ்ஃபுல் ஆவதில் சிரமம் இருந்தது.
ஏ சான்றிதழால் சிக்கல்:
மேலும், கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் என்பதால் பலரும் குடும்பத்துடன் சென்று பார்ப்பதிலும் சவால் இருந்தது. இதனால், வழக்கமாக ரஜினிகாந்த் படம் என்றால் குடும்பத்துடன் சென்று பார்ப்பதற்கான வாய்ப்புகள் இந்த படத்திற்கு கிடைக்கவில்லை.
கூலி படம் வெளிநாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் வெளியாகியது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் கூலி படம் ஓரளவு வசூலை குவித்துள்ளது.
படத்தில் வில்லனாக தெலுங்கு திரையுலகின் பிரபல ஹீரோ நாகர்ஜுனா நடித்துள்ளார். இதனால், படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு ஆந்திரா, தெலங்கானாவில் கிடைத்துள்ளது. இதனால், அவரது ரசிகர்கள் அங்கு இந்த படத்தை வெற்றிப்படமாக மாற்றியுள்ளனர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் கூலி படம் நல்ல வசூலை குவித்துள்ளது. நண்பன் சத்யராஜின் மரணத்திற்கு பழிவாங்குவதற்காக அவரது நண்பனாக ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடித்திருப்பார். அதுவே படத்தின் கதையாகும்.
சண்டைக் காட்சிகளில் அனல் பறந்தாலும் அதுவே படத்திற்கு பின்னடைவாக மாறியதாக பல ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். விரைவில் அடுத்த பட அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.