இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது மனைவி லதா. இவர் ரஜினிகாந்த்தை கடந்த 1981ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

மனைவியுடன் இணைந்து நடித்த ரஜினிகாந்த்:

ரஜினிகாந்த் கதாநாயகனாக மட்டுமின்றி பல படங்களில் சிறப்பு வேடங்களிலும் நடித்துள்ளார் என்பது நமக்கு தெரியும். ஆனால், ரஜினிகாந்தும் அவரது மனைவி லதாவும் இணைந்து நடித்துள்ளனர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நடிகர் ரஜினிகாந்தின் குருநாதர் பாலச்சந்தர். தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான பாலச்சந்தர் 1982ம் ஆண்டு இயக்கிய திரைப்படம் அக்னி சாட்சி. அந்த படத்தில் சிவகுமார், சரிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். கணவன் - மனைவி குடும்ப சண்டையை மையப்படுத்தி வித்தியாசமான திரைக்கதையில் பாலச்சந்தர் இந்த படத்தை இயக்கியிருப்பார். 

காட்சி எப்படி?

இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிகராகவே நடித்திருப்பார். ரஜினிகாந்த் நடித்த அவர்கள் திரைப்படத்தில் மனைவியை கொடுமைப்படுத்துவது போல இருக்கும் காட்சியை பார்க்கும் சரிதா அதை உண்மை என கருதி நள்ளிரவில் ரஜினிகாந்திடம் நியாயம் கேட்க அவரது வீட்டிற்கே செல்வது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். 

அந்த காட்சியின்போது ரஜினிகாந்த் சரிதாவை சாந்தப்படுத்தும் காட்சியின்போது தான் ரஜினிகாந்த் என்றும், தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறுவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியில் ரஜினி தனது மனைவி லதாவுடனே இணைந்து நடித்திருப்பார். தனது குருநாதர் வேண்டுகோளுக்கு இணங்க ரஜினிகாந்த் அந்த காட்சியில் தனது மனைவியுடன் நடித்திருப்பார். 

விருதுகள் வென்ற சரிதா:

இந்த படத்திற்காக சரிதாவிற்கு பல விருதுகள் கிடைத்தது.  கவிதாலாயா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருப்பார். இந்த படம் முதன்முதலில் கமல்ஹாசனுக்காக பாலச்சந்தர் எழுதியது. பின்னர், சில காரணங்களால் சிவகுமாரை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். 

தமிழ் சினிமாவின் பெருமைகளாக கருதப்படும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்குமே குருநாதராக திகழ்ந்தவர் பாலச்சந்தர். இவர்கள் இருவரையும் இணைத்தும், இவர்கள் இருவரையும் தனித்தனியாக வைத்தும் பாலச்சந்தர் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.