தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகர் கிருஷ்ணாவுக்கு நேற்றைய தினம் ( நவம்பர் 13) உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவரை குடும்பத்தினர் ஹைதாரபாத் கச்சி பவுலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கிருஷ்ணாவின் மக்கள் தொடர்பாளரான சுரேஷூம், கவலைப்படும் படி ஏதும் இல்லை என்பதால் ரசிகர்கள் கவலைக்கொள்ள தேவையில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.     


 






கிருஷ்ணாவின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்களின் படி, ஒரு தரப்பு சுவாசக்கோளாறு காரணமாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இன்னொரு தரப்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறுகின்றன. இது குறித்து நடிகர் நரேஷ் கூறும் போது அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அவர் மருத்துமனைவியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறியுள்ளார். 


 






79 வயதாகும் கிருஷ்ணாவின் மனைவியான இந்திரா தேவி அண்மையில் மரணமடைந்தார். அவரது இழப்பு, கிருஷ்ணாவை வெகுவாக பாதித்து விட்டதாக சொல்லப்படுகிறது. வெகு ஆண்டுகளுக்கு முன்னமே நடிப்பை விட்டு ஒதுங்கி கிருஷ்ணாவின் மற்றொரு மனைவியான விஜய நிர்மலாவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அதற்கு முன்னதாக மகேஷ்பாபுவின் சகோதரரான ரமேஷ் பாபு கொரோனா காலத்தில் உயிரிழந்தார். தொடர் இழப்புகளால் தவித்து வரும் மகேஷ்பாபுவின் குடும்பத்திற்கு ரசிகர்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.