கன்னட சினிமாவின் ரசிகர்களால் அப்பு என அழைக்கப்பட்ட புனித் ராஜ் குமார் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி உயிரிழந்தார், அவரது திடீர் மறைவு ஒட்டுமொத்த சினிமா துறையினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. பல கோலிவுட் நடிகர்கள் நேரில் சென்று புனித் ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , ஹூட் ஆப் மூலமாக புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.






 ரஜினிகாந்த் தற்போது வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில்”அனைவருக்கும் வணக்கம் எனக்கு சிகிச்சை முடிஞ்சு நல்ல குணமாகிட்டு வற்றேன் ...நான் மருத்துவமனையில் இருக்கும் பொழுது புனித் ராஜ் குமார் அவர்கள்  அகால மரணம் அடைந்திருக்காங்க.. அந்த விஷயத்தை எனக்கு இரண்டு நாள் கழித்துதான் சொன்னாங்க.. அதைக் கேட்டு  நான் ரொம்ப ரொம்ப வேதனைப்பட்டேன்...மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த குழந்தை..திறமையான அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை.. நல்ல பேரும் புகழும் உச்சியில இருக்கும் பொழுதே..இவ்வளவு சின்ன வயசுலேயே நம்மல விட்டு  அவங்க மறைந்துருக்காங்க.. அவருடைய இழப்பு கன்னட சினிமாத்துறைக்கு ஈடுகட்டவே முடியாது..அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு .. ஆறுதல் சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை..புனித் ராஜ்குமார் ஆத்மா சாந்தி அடையட்டும்...நன்றி!” என தெரிவித்து அதற்கு கேப்ஷனாக “நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை புனீத் “ என பதிவிட்டுள்ளார்.


 


 


புனித் ராஜ்குமார் மறைந்து இன்றோடு 15 நாட்கள் ஆன நிலையில்  தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த ஹூட் பதிவிற்கு கீழே ரசிகர்கள் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். கடந்த மாதம் இறுதில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்த புனித் ராஜ்குமார் திடீரென ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் கார்டியாக் அரஸ்ட் என அழைக்கப்படும் இதய நோய் காரணமாக , சிகிச்சை பலனலிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் உலுக்கியது. கன்னட சினிமாவில் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருந்தவர் புனித் ராஜ்குமார். இன்றும் அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.