ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியான படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியது. 

கூலி:

ரஜினிகாந்துடன் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், அமீர்கான், ஸ்ருதி ஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் கலவையான விமர்சனங்களையே படம் பெற்றது. இருப்பினும் படம் 404 கோடி ரூபாய் வசூலை உலகெங்கும் குவித்ததாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

8 நாள் வசூல் எவ்வளவு?

படம் வெளியாகி 8 நாட்கள் ஆகிய நிலையில், படத்தின் வசூல் என்ன என்பதை காணலாம். படத்தின் 8வது நாளான நேற்று சுமார் ரூ.6.25 கோடியை கூலி படம் வசூலித்துள்ளது. நேற்று சென்னை, பாண்டிச்சேரி, வேலூரில் ஓரளவு காட்சிகள் நிரம்பியிருந்தது. சென்னையில் 28 சதவீத இருக்கைகளும், பாண்டிச்சேரியில் 25 சதவீத இருக்கைகளும், திண்டுக்கல்லில் 20 சதவீத இருக்கைகளும் நிரம்பியிருந்தது.  

இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும், நாளை மற்றும் நாளை மறுநாள் மீண்டும் விடுமுறை என்பதாலும் இந்த இரண்டு நாட்கள் மீண்டும் கூலி வசூல் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த 8 நாட்களில் எவ்வளவு வசூல் என கீழே காணலாம்.

முதல் நாள் - ரூபாய் 65 கோடி

2வது நாள் - ரூபாய் 54.75 கோடி

3வது நாள் - ரூ.39.5 கோடி

4வது நாள் - ரூ.35.25 கோடி

5வது நாள் - ரூ. 12 கோடி

6வது நாள் - ரூ.9.5 கோடி

7வது நாள் - ரூ.7.5 கோடி

8வது நாள் - ரூ.6.25 கோடி

விரைவில் 500 கோடி?

இந்தியாவில் மட்டும் இதுவரை கூலி படம் ரூபாய் 229.75 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. இதனால், உலகெங்கும் வரும் திங்களில் கூலி படம் ரூபாய் 500 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படம் தமிழ் மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கிலும் நல்ல வசூல் ஈட்டி வருகிறது. பெங்களூர், லக்னோ, ஹைதரபாத்தில் இந்தியில் வெளியான கூலி படம் தினசரி திரையரங்கில் 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

சென்னையிலே தமிழில் ஓடும் கூலி படத்தை காட்டிலும் தெலுங்கில் ஓடும் கூலி படத்திற்கு அதிக ரசிகர்கள் நேற்று குவிந்தனர். அதாவது 34 சதவீதம் இருக்கைகள் நிரம்பிய காட்சியுடன் சென்னையில் நேற்று தெலுங்கு கூலி படம் ஓடியது.

படத்தில் அதிகளவு வன்முறை காட்சிகள் இருந்ததால் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் அளித்தனர். வழக்கமாக ரஜினிகாந்த் படம் என்றாலே குடும்பங்களுடன் சென்று பார்ப்பது வழக்கம். ஆனால், கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் குழந்தைகளுடன் சென்று இந்த படத்தை பார்க்க இயலாத சூழல் உருவாகியது. இதுவும் படத்திற்கு ரசிகர்கள் போதுமான அளவு வர இயலாததற்கு முக்கிய காரணம் ஆகும்.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.