ஆறு வயதில் இருந்து குடும்பத்துக்காகவே வாழ்ந்து தேய்ந்தவனின் கண்ணீர் கதையை கூறுவது தான் ரஜினி நடித்திருந்த ”ஆறில் இருந்து அறுபது வரை படம்”


தந்தை இல்லாத குடும்பத்தில் தலைச்சன் பிள்ளை அப்பன் ஸ்தானத்தை அடைகிறான். அதுவும் ஆண்பிள்ளை என்றால் சொல்ல வேண்டாம். தகப்பன் இல்லாத குறையை போக்கி குடும்பத்தை வழிநடத்துவதுடன், தன்னையே குடும்பத்துக்காக அர்பணிக்க கூடிய கட்டாயம் ஏற்படலாம். அப்படி தம்பி, தங்கைகளுக்காக ஆறு வயதில் இருந்தே உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தவனின் கதையை வெள்ளித்திரையில் கதையாய் கூறி இருப்பாய் பஞ்சு அருணாசலம். 


1979ம் ஆண்டு வெளியான படத்தில் ரஜினி, தேங்காய் சீனிவாசன், ஃபடாஃபட் உள்ளிட்டோர் நடித்து இருப்பார்கள். நல்ல வசதிகளுடன் வாழ்ந்து வரும் தேங்காய் சீனிவாசனுக்கு 3 மகன்கள் ஒரு மகள் இருப்பர். அதில் ஒருவர் தான் ரஜினி. ரஜினி சிறுவனாய் இருக்கும்போது விபத்தில் ஒன்றில் தேங்காய் சீனிவாசன் இறந்து விடுகிறார். தந்தை இல்லாததால் குடும்பம் வறுமையில் வாட, வேற வழியில்லாமல் ரஜினி வேலைக்கு செல்கிறார். குடும்பத்தைக் காப்பாற்ற 6 வயதில் வேலைக்கு செய்யும் ரஜினியின் போராட்டம் அப்பொழுதில் இருந்தே தொடங்கிவிட்டது. 


அப்பா வேலைபார்த்த நிறுவனத்தில் வேலைக்கு சேரும் ரஜினி, தனது தம்பி, தங்கைகளை படிக்க வைக்கிறார். கடன் வாங்கி தம்பிகளை டிகிரி வரை படிக்க வைத்து ஆளாக்குகிறார். இதற்குள் இளமை பருவத்தை அடையும் ரஜினிக்கு தன்னுடன் வேலைபார்க்கும் பெண் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், குடும்பத்தின் பொருளாதார சூழலால் காதலை தியாகம் செய்து, ஃபடாஃபட் ஜெயலட்சுமியை திருமணம் செய்து கொள்கிறார். 


இதற்கிடையே படித்து முடித்து வேலைக்கு சென்று நல்ல சம்பளம் வாங்கும் தம்பி ரஜினிக்கு உதவ மறுக்கிறார். வீட்டை விட்டு வெளியே செல்லும் பணக்கார தம்பியுடன், மற்றொரு தம்பியும் சென்று விடுகிறார். கடன் வாங்கி தங்கைக்கு திருமணம் செய்து வைக்கிறார் ரஜினி. அந்த தங்கையும் அண்ணனிடம் இருந்து எவ்வளவு பணத்தை சுரண்ட முடியுமோ அதையெல்லாம் சுரண்டி விட்டு ரஜினியின் குடும்பத்தை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார். 


இப்படி வறுமையின் பிடியில் வாழும் ரஜினிக்கு ஆரம்பத்தில் உதவி செய்வது அவரது நண்பரான சோ மட்டுமே. ஒரு கட்டத்தில் தனக்கு வேலை கொடுத்த முதலாளியும் படுத்த படுக்கையாக இருக்க, ரஜினிக்கு வேலையில்லாமல் போகிறது. தனது மனைவி, குழந்தைகள் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவிக்கும் சூழல் ஏற்படுவதால் நிலை குலைந்து போகும் ரஜினிக்கு உதவ ஆடம்பரமாக வாழும் தம்பிகளும், தங்கையும் வரவில்லை. 


இளம் வயதில் தம்பி, தங்கைகளுக்காக உழைத்த ரஜினி, குழந்தைகளின் பசியை போக்க பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலைக்கு சேர்கிறார். அங்கு பணி செய்து கொண்டே இருக்கும் போது தீ விபத்து ஒன்றில் ரஜினியின் மனைவி இறந்து விடுகிறார்.


வாழ்க்கையில் அடிக்கு மேல் அடி விழுந்து ரஜினியை நிலைக்குலைய செய்கிறது. கடைசி வரை தனது உழைப்பை மட்டுமே நம்பி தாயில்லாத பிள்ளைகளை வளர்த்து வரும் ரஜினி, தனது வாழ்க்கையையே கதையாக எழுதி வெளியிடுகிறார். அதேநேரத்தில் மனைவி இறந்த இன்சூரன்ஸ் பணமும் ரஜினிக்கு வருகிறது. பணம் இல்லாத காரணத்தால் ரஜினியை விட்டு ஒதுங்கிய உறவுகள் இப்பொழுது காக்கா கூட்டம் போல் சூழ்ந்து கொண்டது. 


வாழ்க்கையின் இறுதி காலக்கட்டத்தில் ஒரு எழுத்தாளராக மாறிவிடுகிறார் ரஜினி. ஆறு வயதில் தொடங்கிய ரஜினியின் வாழ்க்கை ஓட்டம் 60 வயதில் முடிவுக்கு வந்தது. இப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை கனத்த இதயத்துடன் கூறிய ஆறில் இருந்து அறுபது வரை படம் இன்றுடன் 44 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 


புவனா ஒரு கேள்விக்குறி, அவள் ஒரு தொடர்கதை, பைரவி, முள்ளும் மலரும் படங்களில் வில்லத்தனம் காட்டி இருந்த ரஜினி இந்த படத்தில் கதையை உணர்ந்து தனது இயல்பான வேகத்தை குறைத்து  ஆழமாக நடித்திருப்பார். தம்பி தங்கைகளை காக்கும் அண்ணனாக, குடும்ப தலைவனாக, மனைவியை இழந்த கணவனாக என ஒவ்வொரு கட்டத்திலும் நடிப்பில் ஸ்கோர் செய்து இருப்பார் ரஜினி. 


படத்தை தயாரித்த பஞ்சு அருணாசலம், வசனம் எழுதி இருப்பார். ஒவ்வொரு காட்சிகளையும் நடுத்தர மனிதனின் வாழ்க்கையை போன்று இயக்கி இருப்பார் எஸ்.பி.முத்துராமன். கதைக்கு ஏற்றவாறு இசையில் இதயத்தை வருடி சென்றிருக்கும் இளையராஜாவின் இசை.