Sundara Travels 2: தகரடப்பா பஸ், எலி, பாம்பு, கரடி மற்றும் நாய் நடிக்கும் சுந்தரா ட்ராவல்ஸ் 2 - விரைவில்
தமிழ் சினிமாவின் இப்போதய ட்ரெண்ட் வேறு மொழியில் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்வது மற்றும் பழைய தமிழ் படங்களை ரீமேக் செய்வது அல்லது பழைய தமிழ் படங்களின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பது தான். அதிலும் சமீபத்தில் வெற்றி பெற்ற பழைய நகைச்சுவை படங்களின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுப்பது தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட்.
சுந்தரா ட்ராவல்ஸ் பார்ட் 2 :
அந்த வகையில் தற்போது உருவாகி வருவது சுந்தரா ட்ராவல்ஸ் பார்ட் 2 . கிட்டத்தட்ட ட்ரைலர் வெளியிட தயாராக உள்ள நிலையில் இருக்கிறது இப்படத்தின் முன்னேற்றம். 2002ல் ஒரு தகரடப்பா பஸ்ஸை வைத்து கொண்டு ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுத்தார் தயாரிப்பாளர் தங்கராஜ். அவர் தான் இந்த சுந்தரா ட்ராவல்ஸ் 2வை இயக்குகிறார்.
எந்த சம்பந்தமும் இல்லை :
சுந்தரா ட்ராவல்ஸ் முதல் பார்ட்டில் முரளி, ராதா, வடிவேலு, மணிவண்ணன், விணுசக்கரவர்த்தி, பி. வாசு, போண்டா மணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இதில் நடித்த பலர் இன்று உயிரோடு இல்லை. அதனால் படத்தை தொடங்கிய உடனேயே சொல்லிவிட்டார்கள் பார்ட் 1க்கும் 2க்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஒரே சம்பந்தம் அந்த தகரடப்பா பஸ் மற்றும் எலி. ஸ்வாரஸ்யமான மற்றுமொரு தகவல் என்னவென்றால் இவர்களுடன் சேர்ந்து மேலும் சில உயிரனங்கள் நடிக்கின்றன. அவை பாம்பு, நாய் மற்றும் கரடி. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் யோகிபாபு மற்றும் கருணாகரன். படத்தின் இயக்குனர் தங்கராஜ் இப்படத்தில் நடிக்கவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தரா ட்ராவல்ஸ் 2 படத்தின் ட்ரைலர் காட்சிகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கின்றனர் படக்குழுவினர்.
எதிர்பாராத வெற்றியை கொடுத்த படம் :
2002ம் ஆண்டு எதிர்பாராமல் வெற்றி பெற்ற ஒரு நல்ல நகைச்சுவை படம். மலையாள படத்தின் ரீ மேக் என்றாலும் ஒரு சிறந்த வெற்றி படமாக அமைந்தது சுந்தரா ட்ராவல்ஸ். நடிகர் முரளி - வடிவேலு காம்பினேஷன் மிக சிறப்பாக அமைந்தது. இருப்பினும் அவர்களையும் மிஞ்சியது அந்த தகரடப்பா பஸ் தான். இரண்டாம் பார்ட்டிலும் அந்த பஸ் இருப்பது ஒரு முக்கியமான கனெக்ட். நிச்சயம் சுந்தரா ட்ராவல்ஸ் 2 படமும் நிச்சயம் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் விருப்ப படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கிறார்கள் படக்குழுவினர்.