2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர்.சி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் படத்தை இயக்கும் வாய்ப்பை இதனால் தான் மறுத்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாய்ப்பை மறுத்த சுந்தர்.சி
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் இணைந்து நடித்து சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இப்படியான நிலையில் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். இதற்கானஅறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதைவிட மிக முக்கியமான தகவலாக இந்த படத்தை சுந்தர். சி இயக்குவார் என தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.
முன்னதாக ரஜினியை வைத்து அருணாச்சலம் படமும், கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் படத்தையும் சுந்தர்.சி இயக்கியிருந்தார். மேலும் காமெடி படங்களையும், ஹாரர் படங்களையும் இயக்கி தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளாக தனக்கென தனியிடம் பிடித்து தொடர்ந்து ட்ரெண்டிங்கான இயக்குநராக சுந்தர்.சி வலம் வந்ததால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் பரவசமடைந்தனர். ஆனால் இந்த சந்தோஷம் அடுத்த சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படத்தில் இருந்து சுந்தர்.சி விலகினார்.
சொல்லப்பட்ட காரணம்
எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் இந்த படத்தில் இருந்து விலகுகிறேன். இருவரையும் இயக்கக்கூடிய இந்த முயற்சி உண்மையில் எனக்கு ஒரு கனவு நனவாகும் தருணமாகும். நம் கனவுகளிலிருந்து வேறுபட்டாலும் கூட நமக்காக வகுக்கப்பட்ட பாதையை நாம் பின்பற்ற வேண்டிய தருணங்கள் வாழ்க்கையில் உள்ளது என நீண்ட விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார்.
அரசியல் அழுத்தத்தால் விலகினாரா?
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் அக்கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுந்தர்.சி மனைவியும், பாஜக பிரமுகருமான குஷ்பு உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில் கமல்ஹாசன் அரசியல் பாதையில் திமுக கூட்டணியில் உள்ளார். ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தை இன்பன் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் சுந்தர்.சி அந்த படத்தில் வெளியேற உண்மையான காரணம் அரசியல் முடிவு தான் என தகவல் வெளியாகியுள்ளது. அவரை கடந்த சில மாதங்களாகவே அரசியலுக்கு தயார் செய்யும் பணியை குஷ்பு மேற்கொண்டு வந்தார் எனவும் கூறப்படுகிறது.
தானும், கமல்ஹாசன் இருவரும் அரசியலில் எதிரெதிர் துருவத்தில் இருப்பதால் இந்த படத்தை இயக்குவதை சுந்தர்.சி தவிர்த்து விட்டார் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சுந்தர் சி இயக்கி வரும் புருஷன் படத்தை ஏ.சி.சண்முகத்தின் மகன் ஏ.சி.அருண்குமார் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
