கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 173 படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட காரணத்திற்காக இப்படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி தெரிவித்திருந்தாலும் ரஜினியுடன் கருத்து வேறுபாடு காரணாமக சுந்தர் சி படத்தில் இருந்து விலகியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன
தலைவர் 173
கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 173 ஆவது படத்தின் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கவிருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுந்தர் சி இப்படத்தை இயக்குவதாக வெளியான அறிவிப்பு பலருக்கு ஆச்சரியமளித்தது. இதற்கு முன்னதாக ரஜினியின் அருணாச்சலம் படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். தலைவர் 173 எந்த மாதிரியான படமாக இருக்கப் போகிறது என பலரும் எதிர்பார்த்த நிலையில் இப்படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிக்கை வெளியிட்டார்
" சில முக்கியமான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மனநிறைவுடன் இருக்கிறேன். எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், மதிப்புமிக்க #தலைவர்173 படத்தில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். புகழ்பெற்ற சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் இடம்பெறும் இந்த முயற்சி, புகழ்பெற்ற உலகநாயகன் திரு. கமல்ஹாசன் அவர்கள் தயாரிக்கும் இந்த முயற்சி, உண்மையில் எனக்கு ஒரு கனவு நனவாகும் தருணம். வாழ்க்கையில், நமக்காக வகுக்கப்பட்ட பாதையை நாம் பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன, அது நம் கனவுகளிலிருந்து வேறுபட்டாலும் கூட. இந்த இரண்டு சின்னங்களுடனான எனது தொடர்பு நீண்ட தூரம் செல்கிறது, நான் எப்போதும் அவர்களை மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருப்பேன். கடந்த சில நாட்களாக நாங்கள் பகிர்ந்து கொண்ட சிறப்பு தருணங்கள் எனக்கு என்றென்றும் போற்றப்படும். அவர்கள் எனக்கு விலைமதிப்பற்ற பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளனர், மேலும் நான் முன்னேறும்போது அவர்களின் உத்வேகத்தையும் ஞானத்தையும் தொடர்ந்து தேடுவேன். இந்த வாய்ப்பிலிருந்து நான் விலகிச் சென்றாலும், அவர்களின் வழிகாட்டுதலை நான் தொடர்ந்து நாடுவேன். இந்த மகத்தான படைப்பிற்காக என்னைப் பரிசீலித்ததற்காக அவர்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என சுந்தர் சி தனது அறிக்கையில் கூறியிருந்தார்
தலைவர் 173 படத்திலிருந்து விலகியது ஏன்?
தனது தனிப்பட்ட காரணங்களுக்காக சுந்தர் சி இப்படத்தில் இருந்து விலகுவதாக கூறினாலும் நிஜமான காரணமாக வேறு ஒன்றை சொல்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர். அதன்படி சுந்தர் சி ரஜினிக்கு ஒரு ஜாலியான கதை சொன்னதாகவும் ஆனால் ரஜினிக்கு அதில் திருப்தியில்லை என்றும் வேறு மாஸான கதையாக ரஜினி எதிர்பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தை இயக்க தான் சரியான ஆள் இல்லை என்று நினைத்த சுந்தர் சி படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என கூறப்படுகிறது