இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவின் மகள் அவந்திகா விளம்பர படத்தின் வழியாக திரைக்கு அறிமுகமாக இருக்கிறார். தனது மகள் குறித்து குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் உணர்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் மகள் பிறந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்பு. சுந்தர் சி இயக்கிய முறை மாமன் படத்தில் குஷ்பு நாயகியாக நடித்தார். இந்த படத்தின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரு மகள்கள் உள்ளன. மூத்த மகள் அவந்திகா லண்டனில் நடிப்பு பயிற்சி பெற்றவர். விரைவில் அவர் திரையில் அறிமுகமாக இருக்கிறார். அந்த வகையில் பிரபல நகை கடை விளம்பரத்தில் அவந்திகா சுந்தர் மாடலாக தோன்றியுள்ளார்.
மகள் அவந்திகா பற்றி குஷ்பு
பத்திரிகையின் முகப்பு பக்கத்தில் அவந்திகாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தனது எக்ஸ் பக்கத்தில் குஷ்பு மகள் குறித்த மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் " 25 வருடங்களுக்கு முன் இதே பத்திரிகையின் முகப்பு பக்கத்தில் என் மகள் இடம்பெற்றாள். தற்போது இதே பத்திரிகையில் நடிகையாக கேமரா முன் தோன்றியிருக்கிறார். வாழ்க்கை என்பது ஒரு வட்டம். ஒரு அம்மாவாக எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த அவளது தந்தை கலங்கிய கண்களுடன் நிற்கிறார். " என அவர் பதிவிட்டுள்ளார்