ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் ரிலீஸ் ஆன 4 நாட்களில் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  இந்தப் படத்தில் ஆமீர்கான், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின் ஷாயிர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் படத்தை காட்டிலும் கூடுதல் வசூலை ஈட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. 

கூலி படத்தை பார்த்த அனைவருமே இப்படத்திற்கு ஏன் ஏ சான்றிதழ் வழங்கினார்கள் என்பது தான் கேள்வியாக இருந்தது. ஜெயிலர் படத்தை காட்டிலும் இதில் வன்முறை காட்சிகள் இல்லை. ரத்தக்களறியான ஆக்சன் காட்சிகளும் இடம்பெறவில்லை என்பதைத்தான் சுட்டிக்காட்டியிருந்தனர். ஜெயிலர் படத்திற்கே சென்சார் போர்டு U/A  சான்றிதழ் வழங்கியது. கூலிக்கு ஏன் A சர்டிபிகேட் என திரை ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் குடும்பங்கள் ரசிக்கும் படமாகவே இருக்கும். அதுதான் அவரது பலமாக பார்க்கப்படுகிறது. 

அதனால் தான் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நிலைத்திருக்கிறார் என்றே விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், கூலி படத்தில் இறந்தவர்களை எரிப்பது போன்ற காட்சிகள் விஎப்எக்ஸ் தான். அதீத வன்முறையும் இதில் இல்லை என்பதே அனைவரது கருத்தாக இருக்கிறது. ஆனால், தற்போது சிங்கப்பூரில் கூலி படத்தை மறு தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அதன்படி No children under 16 (NC-16) என்பதிலிருந்து PG-13 (Parents strongly cautioned) என மாற்றப்பட்டுள்ளது. அதாவது பெற்றோர் அனுமதியுடன் அனைவரும் பார்க்கும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், வசூலில் மந்தம் ஏற்பட வாய்ப்பில்லையாம்.

இந்நிலையில், கூலி திரைப்படத்தை  U/A சான்றிதழுடன் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் முறையீடு செய்த நிலையில், நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி டி.வி.தமிழ்செல்வி அனுமதியளித்துள்ளார். மேலும், கூலி படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருப்பதால் தணிக்கை சான்றிதழ் குழு A சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.