தேசிய விருதுகளை குவித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் இயக்குனர் சுதா கொங்கரா. அப்படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்க உள்ள அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
தேசிய விருதுகளை குவித்த சூரரைப் போற்று :
நடிகர் சூர்யா - நடிகை அபர்ணா பாலமுரளி நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் நிறுவனரான கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்த இப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை என ஐந்து பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளையும் தட்டி சென்றது. 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் கீழ் தயாரிக்கப்பட்ட இப்படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் இயக்குனர் சுதா கொங்கரா.
சுதா கொங்கரா அடுத்த புராஜெக்ட் :
இந்தியில் தயாராகும் 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார். மிகவும் மும்மரமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. இப்படத்தின் பணிகள் முடிவடைந்த உடன் அடுத்ததாக ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்ததாக ஒரு படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா எனும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை என்றாலும் சில வதந்திகள் மட்டும் பரிமாறப்படுகின்றன.
அபிஷேக் பச்சன் vs சூர்யா :
சுதா கொங்கரா ஏர் டெக்கான் கோபிநாத் பயோபிக் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரத்தன் டாடாவின் பயோபிக் படத்தை இயக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அப்படத்தில் ரத்தன் டாடாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் அல்லது நடிகர் சூர்யா நடிக்க கூடும் என பேசப்படுகிறது. இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் அம்பானியின் பயோபிக் படமாக வெளியான 'குரு' படத்தில் நடித்ததால் ரத்தன் டாடாவின் படத்திலும் அவர் நடிக்கலாம் என யூகிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தவறான செய்தி :
சுதா கொங்கரா இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து ஹோம்பலே பிலிம்ஸின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா பேசுகையில் இந்த செய்தி முற்றிலும் வதந்தி. இது ஒரு பயோபிக் படமல்ல. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் திரைப்படம். எனவே இது ஒரு பயோபிக் திரைப்படம் என்பது தவறான செய்தி என்பதை தெளிவு படுத்தினார். அதனால் இந்த திரைப்படத்திலும் நடிகர் சூர்யா நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்பது நெட்டிசன்களின் கருத்தாகும்.