குழந்தை C/O கவுண்டம்பாளையம்


நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள படம் குழந்தை C/O கவுண்டம்பாளையம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நேற்று சென்னையில்  நடைபெற்றது. இந்த விழாவில் உதயகுமார், கனல் கண்ணன், பேரரசு, பிரவீன் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பிரவீன் காந்தி , கனல் கண்ணன் , பேரரசு ஆகிய மூவரும் பேசிய உரைகள் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.


ரஞ்சித் , வெற்றிமாறன் தான் தமிழ் சினிமாவின் தளர்ச்சிக்கு காரணம்


அந்த வகையில் மேடையில் பரபரப்பைக் கிளப்பும் வகையில் பேசியிருந்தார் இயக்குநர் பிரவீன் காந்தி. அவர் பேசுகையில் "பா. ரஞ்சித், வெற்றிமாறன் போன்ற சில இயக்குநர்கள் சினிமாவில் வளர்ச்சி கண்ட பிறகு தான் தமிழ் சினிமா தளர்ச்சி அடைந்து விட்டது. சினிமாவில் சாதியைப் பற்றி பேசவே கூடாது. அதுதான் என்னுடைய கொள்கை. சினிமாவில் சாதியைப் பற்றி பேசுபவன் ஒதுக்கப்பட வேண்டியவன். ” என்று கூறினார். இவரைத் தொடர்ந்து பேசிய சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.


காவியை யாரும் தொட முடியாது


தனது பேச்சை தொடங்கிய கனல் கண்ணன் தான் வைத்திருந்த காவி நிறத் துண்டை சுட்டிக் காட்டி “ காவியை யாரும் தொட முடியாது . காவியோட பவர் அப்டி” என்றார். இதனைத் தொடர்ந்து தனக்கும் நடிகர் ரஞ்சித்திற்கும் இடையிலான நட்பைப் பற்றி பேசினார் கனல் கண்ணன்.


நாங்க யாரையும் நசுக்கவில்லை






தொடர்ந்து பேசிய அவர் “இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்ததற்கு முக்கியமான காரணம் எவன் ஒருவன் நம்மை திருப்பி அடிக்கிறானோ அவனை நாம் திருப்பி அடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்தும் இந்த படம். எல்லாரும் நாங்கள் நசுக்கப் பட்டோம் , பிதுக்கப் பட்டோம் என்று சொல்கிறார்கள் . சினிமாவில் நாங்கள் யாரையும் நசுக்கவும் இல்லை பிதுக்கவும் இல்லை. நீங்கள் பிதுக்கினால் நாங்கள் நசுக்குவோம். நீங்க நிறைய எதிர்பார்ப்பீங்கனு எனக்கு தெரியும். ஆனால் நான் எதையும் பேசமாட்டேன். ஏற்கனவே மூன்றாவது கேஸ் போட்டு குண்டாஸில் என்னை உள்ளே தள்ள பிளான் போடுகிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் நான் சிக்க மாட்டேன். ரொம்ப தெளிவா இருக்கேன்” என்று கனல் கண்ணன் பேசியுள்ளார். கனல் கண்ணன் உட்பட இந்த நிகழ்ச்சியில் பேசியவர் அனைவரது கருத்துக்களும் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளன.