கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியங்கா மோகன். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகன். சமீபத்தில் வெளியான ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் 'They Call Him OG' என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இது தற்போது 300 கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றிகரமாக திரையில் ஓடி வருகிறது. இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது.
இவ்வாறான சூழலில் நடிகை பிரியங்கா மோகன் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கும் ட்ரோல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. ஏன் இவர்மீது இவ்வளவு வன்மம், பிரியங்கா மோகனை இவ்வாறு டார்கெட் செய்து தாக்குவதற்கான காரணம் தான் என்ன என்ற வினாவும் நம்மில் எழுகிறது.
இணையத்தில் வைரலாகும் பிரியங்கா மோகன் படங்கள்
இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகை பிரியங்கா மோகனின் புகைப்படங்கள் சில சமூக ஊடகங்கள் முழுவதும் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் அனைத்தும் காண்போரை முகம் சுளிக்க வைக்கும் வகையிலும் இருந்துள்ளது. ஏ.ஐ மூலம் எடிட் செய்யப்பட்ட இந்த புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு நடிகை பிரியங்கா மோகன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
என்ன மாதிரியான செய்திகளை நாம் உருவாக்குகிறோம்?
''ஏ.ஐ மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இது போன்ற தவறான புகைப்படங்களை பரப்புவதை உடனடியாக நிறுத்திவிடுங்கள். ஏ.ஐ என்பது ஒருசில நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு பயன்படுத்த வேண்டிய ஒரு கிரியேட்டிவிட்டி, இவ்வாறான செயல்களுக்கு பயன்படுத்துவதற்காக அல்ல. என்ன மாதிரியான செய்திகளை நாம் கிரியேட் செய்கிறோம், எது போன்ற விஷயங்களை நாம் பகிர்கிறோம் என்பதை அறிந்து செயல்படுங்கள்” என்று தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு நடிகை பிரியாங்கா மோகனின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு திரைப்பிரபலம் இவ்வாறு சித்தரிக்கப்பட்டு தொடர்ந்து டார்கெட் செய்யப்படுவது ஏன் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.