'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலமாக ஃபேமஸானவர் நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியில் இவரின் காமெடி கவுண்டர்களை ரசிக்காத ஆடியன்ஸ் இருக்க மாட்டாங்க. இவருக்குனு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாச்சு. இந்நிலையில், இவருக்கென, தனியாக யூ ட்யூப் சேனல் ஒன்றையும் புகழ் தொடங்கினார். இதுலயும் இவருக்கு சப்ஸ்கிரைபர்ஸ் அதிகமானர்கள். மேலும், இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை இவரின் சேனலிலும் அப்லோட் செய்து வந்தார். தற்போது விஜய் டி.வியின் புகழ், நிறைய பேருக்கு செல்லம்.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவருக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் மூலமாக சினிமாவில் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. சிம்புவின் 'மாநாடு' படத்திலும் இவர் நடித்து வருகிறார். தவிர, 'வலிமை' படத்தில் புகழ் இருப்பதாகவும் செய்திகள் வந்தன. மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்து, சினிமா வரைக்கும் வளர்ந்த புகழை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த உயர்வுக்கு புகழின் கடின உழைப்பே காரணம். இந்நிலையில் இவருக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக தகவல்கள் வந்தன. இதுகுறித்து புகழ் தரப்பிலிருந்து எதுவும் தெரிவிக்காத நிலையில் புகழிடமே திருமணம் குறித்து கேட்டோம், ஷூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருந்த புகழ் நம்முடைய கேள்விக்கு பதிலளித்தார்.
''காலையில அஞ்சு மணிக்கு எழுந்தா தூங்க கூட நேரம் இல்லாம ஓடிக்கிட்டு இருக்கேன். நிறைய ஷூட்டிங் வரிசையில இருக்கு. இப்போதான் கொஞ்சம் மேல வந்துட்டு இருக்கேன். இப்போ ரகசியத் திருமணம்னு செய்திகள் வருது. இதுல எந்த உண்மையும் இல்ல. ஏன்னா, எனக்கு வேலைதான் எல்லாமே. கல்யாணம் பத்தி எந்த ப்ளானும் பண்ணல. இன்னும் சிங்கிளாதான் இருக்கேன். குறிப்பா, என்னோட சொந்த அண்ணாவுக்கு திருமணம் முடிஞ்சு அஞ்சு வருஷம் கடந்து குழந்தை இல்லாம இருந்தாங்க. இப்போதான் அண்ணாவுக்கு குழந்தை பொறக்கப்போகுது. எங்க வீட்டுல இருக்குற எல்லாருமே அண்ணாவுக்கு குழந்தை பொறக்குற சந்தோஷத்துல இருக்கோம். இப்போ எங்க சந்தோஷம் இதுலதான் இருக்கு. இந்த நேரத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்றதுல உண்மை இல்ல. முக்கியமா நான் காதல் திருமணம் செய்யமாட்டேன். என்னோட திருமணப் பொறுப்பை பெற்றோர்களிடம் கொடுத்துட்டேன். எனக்கு பெண் பார்த்து திருமணம் முடிச்சு வைப்பாங்க. இன்னொரு முறை சொல்லிக்குறேன் புகழ் ஸ்டில் சிங்கிள்னு'' என சொல்லி முடித்தார் குக் வித் கோமாளி புகழ்.