இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. RRR படத்திற்கு பின் பிரம்மாண்டமான சாகச கதையை திரைப்படமாக்கி வருகிறார் ராஜமெளலி. இப்படத்தைப் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை மிரளவைத்துள்ளது
கென்யாவில் படப்பிடிப்பு
பிரபாஸ் , ராம் சரண் , ஜூனியர் என்.டி.ஆர் போன்ற முன்னணி தெலுங்கு நடிகர்களோடு பணியாற்றியதைத் தொடர்ந்து தற்போது மகேஷ் பாபுவின் 29 ஆவது படத்தை ராஜமெளலி இயக்க இருக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். பிரியங்கா சோப்ரா இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் மாபெரும் சாகச கதையாக இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் ஒரிஸாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெரும்பாலான படப்பிடிப்பு காட்சிகள் கென்யாவில் நடைபெற இருக்கிறது. இதற்காக இன்று கென்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சக செயலாளரை இயக்குநர் ராஜமெளலி சந்தித்த்தார்
120 நாடுகளில் ரிலீஸ்
சுமார் ரூ 1200 கோடி பட்ஜெட்டில் இரு பாகங்களாக இப்படம் உருவாக இருக்கிறது. 120 நாடுகளில் இந்த படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மிரளவைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஷாருக் கான் நடித்த ஜவான் திரைப்படம் அதிகபட்சமாக 100 நாடுகளில் வெளியானது.
1000 கோடி கனவில் கோலிவுட்
ராஜமெளலி இயக்கிய பாகுபலி இரண்டாம் பாகம் திரைப்படம் உலகளவில் 1000 கோடி வசூலித்த முதல் இந்திய படமாக சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து கல்கி , புஷ்பா , ஆகிய படங்கள் 1000 கோடி வசூல் சாதனை படைத்தன. தற்போது மகேஷ் பாபு ராஜமெளலி கூட்டணி ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்க்கும் படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மறுபக்கம் கோலிவுட் சினிமா துறையினருக்கும் , ரசிகர்களுக்கும் 1000 கோடி என்பது இன்னும் எட்டா கனியாக இருந்து வருகிறது. கங்குவா , லியோ, தி கோட் , கூலி ஆகிய படங்கள் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வசூலில் பெரியளவில் சாதிக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.