இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் 'ஜவான்'. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பிரியா மணி, யோகி பாபு, சுனில் குரோவர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் நடைபெற்ற ஷூட்டிங் :
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் மட்டும் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அதற்காக நடிகை நயன்தாரா மும்பையில் முகாமிட்டுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. அந்த வகையில் நேற்று மும்பையில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் நயன்தாரா மற்றும் ஷாருக்கான் கலந்து கொண்டுள்ளனர். கடலின் நடுவே கப்பலில் அப்பாடலின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. நடன இயக்குனர் ஃபரா கான் கோரியோகிராப் செய்த பாடலுக்கு பல்லார்டில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அந்த படப்பிடிப்பு வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
மேலும் மும்பையில் உள்ள பாந்த்ரா கோட்டையில் பாடலின் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதில் நயன்தாரா மற்றும் எஸ்.ஆர்.கே கலந்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
உச்சத்தில் எதிர்பார்ப்பு :
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய ஜவான் படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை என மாறி மாறி படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்தது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் 'ஜவான்' படத்தின் ரிலீசுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் மிகவும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறது. நடிகை நயன்தாரா இப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. வட மாநிலங்களை சேர்ந்த ரசிகர்கள் மட்டுமின்றி தென்னிந்திய ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
மேலும் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 'நயன்தாரா 75 ' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.