கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகைகளுள் ஒருவராக உருவெடுத்து கொலோச்சி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.


தமிழ், மலையாளம், தெலுங்கு,கன்னடம்,இந்தி என நாடு முழுவதும் பான் இந்தியா ஸ்டாராக 80களிலேயே வலம் வந்த ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு இதே நாளில் மறைந்தார்.


பாலிவுட்டில் தன்னிகரற்ற நடிகையாக உருவெடுத்து உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த ஸ்ரீதேவி தமிழில் கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தைத் தொடங்கினார்.


இந்நிலையில், ஸ்ரீதேவியின் சினிமா பயணத்தில் மறக்க முடியாத சில படங்கள், கதாபாத்திரங்களைக் காணலாம்.


மூன்றாம் பிறை/ சத்மா




தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படங்களுள் ஒன்றாகக் கொண்டாடப்படும் மூன்றாம் பிறை 1982ஆம் ஆண்டு வெளிவந்தது. பாலுமகேந்திராவின் திரை வாழ்வில் முக்கியமான படங்களுள் ஒன்றான மூன்றாம் பிறை படத்தில் சுய நினைவிழந்த விஜி எனும் கதாபாத்திரத்தில் நடித்து கமலின் சீனு கதாபாத்திரம் தொடங்கி படம் பார்க்கும் அனைவரையும் தன்னுடன் காதலில் விழ வைத்திருப்பார். இந்தியில் இந்தப் படம் 1984ஆம் ஆண்டு சத்மா எனும் பெயரில் கமல் - ஸ்ரீதேவி நடிப்பிலேயே ரீமேக் செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது இப்படம்


16 வயதினிலே


ஸ்ரீதேவி என்றதும் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது செந்தூரப்பூவே பாடலில் வெள்ளை நிற தாவணியில் ஊஞ்சலில் மகிழ்ச்சியாக ஆடி பாடும் கதாபாத்திரம்.


சப்பாணி, பரட்டையன் கதாபாத்திரங்களில் ரஜினி, கமல் என இரு சிறந்த நடிகர்கள் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி கோலோச்சிய நிலையில், இவர்களுக்கு மத்தியில் தன் ‘மயில்’ கதாபாத்திரத்தால் ஸ்ரீதேவி என்றென்றும் தன் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.


ஜானி


’ஏன் அப்படி பேசினீங்க..’ எனக் கேட்கும் ரஜினியிடம் பொய் கோபம் காட்டி அழுகையும் வெட்கமும் கலந்து ’நான் அப்படிதான் பேசுவேன்’ என ஸ்ரீதேவி சொல்லும் காட்சியில் ஸ்ரீதேவியுடனும், அவரது மூக்குத்தியுடனும் காதலில் விழாதவர்கள் நிச்சயம் இருக்க முடியாது.






ஜானி படத்தில் ஸ்ரீதேவி ஏற்றிருந்த அர்ச்சனா கதாபாத்திரம் இன்றும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு ரசித்து கொண்டாடப்பட்டு வருகிறது.


மிஸ்டர் இந்தியா


பாலிவுட்டில் ஸ்ரீதேவிக்கு திருப்புமுனை திரைப்படமாக அமைந்த படம் மிஸ்டர் இந்தியா. இந்தியிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சாந்தினி, லம்ஹே படங்கள் மூலம் அவர் பிரபலமடைந்திருந்தார், ஆனால் ஸ்தேவியின் கணவர் போனி கபூர் தயாரித்த மிஸ்டர் இந்தியா படம் அவருக்கு பெரும் புகழைப் பெற்று தந்தது. அனில் கபூர் ஜோடியாக நடித்த இந்தப் படத்தில் இடம்பெற்ற ஹவ்வா ஹவ்வாய் பாடல் ஸ்ரீதேவியின் அற்புதமான நடனத் திறமைக்கு சான்றாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.


 



இங்கிலீஷ் விங்கிலீஷ்


குழந்தைகள் தொடங்கி தன் கணவர் வரை அனைவராலும் அவமானப்படுத்தப்படும் சாஷி எனும் நடுத்தர வயது பெண், உறவினர் வீட்டு கல்யாணத்துக்காக இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று அங்கு ஆங்கிலம் கற்று உத்வேகம் பெறும் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்தார். 2012ஆம் ஆண்டு இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் தன் 48 வயதில் சிறப்பான ரீஎண்ட்ரீ கொடுத்து ஒட்டுமொத்த இந்தியா சினிமாவை மீண்டும் திரும்பி பார்க்க வைத்து தன்னிகரில்லா தன் நடிப்புத் திறமையை மீண்டும் நிரூபித்தார் ஸ்ரீதேவி.