போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் இருவர் கைதான சம்பவம் கோலிவுட்டையே அதிர்சசியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக கொக்கைன் போன்ற போதைப் பொருள் அதிகம் விநியோகிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி குமுதம் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். மேலும், இதில், முன்னணி நடிகைகளையும் வம்புக்கு இழுத்திருக்கிறார்.
பெரிய ஹீரோக்கள் சிக்குவார்கள்
கொக்கைன் பழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. இதுகுறித்து வெளியில் சொன்னால் எதிர்காலம் போய்விடும் என்ற பயத்தில் பல நடிகர், நடிகைகள் இருக்கின்றனர். நான் தோல்வியடைந்த நடிகையாக இருக்கிறேன். இதற்கு முன்பு சினிமாவில் நிகழும் பாலியல் தொல்லைகள் குறித்தும், குரல் கொடுத்திருக்கிறேன், இதுபற்றி சொன்னால் யாரும் எனக்கு ஆதரவாக நிற்கமாட்டார்கள். இந்த விவகாரத்தில் பல நடிகர்கள் சிக்குவார்கள். எனது கை, கால்களைப் பிடித்து எனது உதட்டில் கொக்கைனைத் தடவி விட்டார்கள். அவர்கள் இப்போது பணம் கொண்ட பெரிய நடிகர்களாக இருக்கிறார்கள். இதை சொன்னால் பணம் சம்பாதிப்பதற்காக செய்கிறேன் என கூறுவார்கள் என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
கவர்ச்சி காட்டி சமையல் செய்கிறேன்
சினிமாவில் நடக்கும் உண்மைகளை வெளியே சொல்லி என்னை நானே பலியிட்டு கொண்டேன். இதனால், எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ரியாலிட்டி ஷோக்களிலும் என்னை அழைக்க மறுக்கிறார்கள். எனது வாழ்க்கையை நடத்த போராடி வருகிறேன். இதனால், நானே ஒரு யூடியூப் சேனலை தொடங்கியுள்ளேன். கவர்ச்சியை காட்டி சமையல் செய்து கவனம் ஈர்க்கிறேன். சமையலுக்கு எதுக்கு கவர்ச்சி என்று நீங்கள் கேட்கலாம். வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் எனக்கு வேறு வழி தெரியவில்லை அதனால் கவர்ச்சி காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். யூடியூப் சேனல் மூலம் சிறிய தொகை கிடைக்கிறது என ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
த்ரிஷா, நயன்தாரா கேள்வி கேட்பதில்லை
சினிமாவில் பெண்களுக்கு எதிராக பல அநீதி நடக்கிறது. போதை பொருள் விவகாரம் அனைத்தும் த்ரிஷா, நயன்தாராவிற்கு தெரியாமலா இருக்கும். அவர்கள் இதுகுறித்து எதிர்ப்பு குரல் கூட கொடுக்கவில்லை. மீ டூ புகார் குறித்து பேசும் போதும் வாயை மூடிக்கொண்டு அமைதியாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தொழிலும், பணமும் பேரும், புகழும் தான் முக்கியம். லேடி, சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொள்ளும் நயன்தாரா பெண்கள் பிரச்னைக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என ஸ்ரீரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார். ட
சினிமாவில் நடிக்க வருவோர் கவனத்திற்கு
சினிமாவில் நடிக்க வரும் பெண்களுக்கும் சின்ன வேண்டுகோள் வைக்கிறேன். சினிமாவில் பெரிய நடிகர்களுடன் சண்டை போடாதீர்கள். பிரச்னைகள் இருந்தாலும் வெளியே யாரிடமும் சொல்லாதீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த இடத்தை விட்டு விலகி செல்லுங்கள். நான் சினிமா வாய்ப்பு தேடி செல்லும் போது அட்ஜஸ்ட்மென்ட்டால் என்னை நானே சீரழித்து கொண்டேன். சினிமாவை தாண்டி ஏதேனேும் தொழிலை கற்றுக்கொள்ளுங்கள் என ஸ்ரீரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.