ஸ்ரீஜித் ரவி மலையாளத் திரையுலகில் பரவலாக அறியப்பட்ட நடிகர்களில் ஒருவர். பிரபல மலையாள நடிகர் டி.ஜி. ரவியின் மகனான இவர், 2005ஆம் ஆண்டு வெளியான 'மயூகோம்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து 'சாந்துபொட்டு', 'பிக் பி', 'மிஷன் 90 டேஸ்', 'பிராஞ்சியெட்டன் அண்ட் தி செயின்ட்', 'புண்யாளன் அகர்பத்தீஸ்', 'மெமரீஸ்', 'ராமலீலா' உள்ளிட்ட பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். மலையாளப் படங்கள் மட்டுமின்றி தமிழ், கன்னடத் திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். தமிழில் , கும்கி , மதயானைக்கூட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள அரனாட்டுக்கரா பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பள்ளி முடிந்து தாங்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்குத் திரும்பிக் கொண்டிருந்த 14 மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுமிகளிடம், காரில் வந்த நடிகர் ஸ்ரீஜித் ரவி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
குழந்தைகள் அளித்த தகவலின் அடிப்படையில் அவர்களது பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து, திருச்சூர் மேற்கு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஸ்ரீஜித் ரவி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஓராண்டு சிறை தண்டனை
இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் இருந்து விடுவிக்கக் கோரி 2022ஆம் ஆண்டிலேயே ஸ்ரீஜித் ரவி மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உயர் நீதிமன்றமும் அவரது மனுவை பின்னர் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.
இந்த வழக்கின் விசாரணையின்போது அரசுத் தரப்பு சார்பில் 21 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். குறிப்பாக, பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளின் சாட்சியங்கள் ஒரே மாதிரியாகவும் நம்பகத்தன்மையுடனும் இருந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது. காவல்துறையின் விசாரணையில் சில குறைபாடுகள் இருந்தபோதிலும், சிறுமிகளின் வாக்குமூலங்களை நிராகரிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கை விசாரித்த திருச்சூர் விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரம்யா மேனன், ஸ்ரீஜித் ரவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகத் தீர்ப்பளித்தார். போக்சோ சட்டத்தின் 11(i) மற்றும் 12ஆவது பிரிவுகள், இந்திய தண்டனைச் சட்டத்தின் 509ஆவது பிரிவு ஆகியவற்றின் கீழ் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகை வசூலிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளுக்கும் தலா ரூ.25 ஆயிரமாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஸ்ரீஜித் ரவி தெரிவித்தார். இதனால், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்த நீதிமன்றம், ரூ.50 ஆயிரம் பிணைத்தொகை மற்றும் இரண்டு நபர்களின் உத்தரவாதத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்கியது. டிசம்பர் 23ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது. எனவே, தற்போது அவருக்கு மேல்முறையீடு செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
