இந்தியாவில் ஊரடங்கிற்கு பிறகு ஓடிடி தளங்களில் வெளியாகும்  வெப்சீரிஸ்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்தியாவில் நடப்பாண்டில் இரண்டு வெப் சீரிஸ் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. அவற்றில் ஒன்று மணி ஹைஸ்ட். மற்றொன்று ஸ்குவிட் கேம். உலகளவில் இந்த இரண்டு வெப் சீரிஸ்கள் ரசிகர்கள் மத்தியில் எது சிறந்த வெப்சீரிஸ் எனும் போட்டி நடக்கும் அளவிற்கு இந்த இரண்டு வெப்சீரிஸ்களும் வரவேற்பை பெற்றன. 


இந்த இரண்டு வெப்சீரிஸ்களும் நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியானது. இதில் நடித்த ஒவ்வொரு கேரக்டருக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு அப்படி ஸ்குவிட் கேமில் கவனத்தை ஈர்த்தவர் 77 வயதான ஓ யாங் ஷூ. அவரது நடிப்புக்கு தற்போது கவுரவம் கிடைத்துள்ளது. 




சின்னத்திரை கேட்டகிரியில் ஸ்குவிட் கேமில் நடித்த அவருக்கு சிறந்த துணை கதாபாத்திரத்துக்கான கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. தங்களுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் கோல்டல் குளோப் இதனை அறிவித்துள்ளது. இதன் மூலம் கோல்டன் குளோப் விருதை வாங்கும் முதல் கொரியன் நடிகர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 


79 வது கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. கொரோனா காரணமாக எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் இந்த விழா நடந்தது. இந்த விழாவில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை, அதேபோல நேரடி ஒளிபரப்போ, டிவி ஒளிபரப்போ இல்லை. விருது அறிவிப்பு மட்டுமே அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.






கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி வெளியானது ஸ்குவிட் கேம். லி ஜங் ஜே. பாரக் ஹா சூ, வி ஹா ஜூன், ஹோயோங் ஜங், ஓ யூங் சூ, ஹூ சங் டே, கிம் ஜூ ரூங் மற்றும் இந்தியாவை சேர்ந்த அனுபம் திரிபாதி ஆகியோர் இதில் நடித்துள்ளனர். கடுமையான பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் 456 பேர் விளையாடும் ஒரு வித்தியாசமான விளையாட்டுதான் ஸ்குவிட் கேமின் திரைக்கதை. இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ரூபாய் 45.6 பில்லியன் பரிசுத்தொகையை வெல்வார்கள். பலராலும் நிராகரிக்கப்பட்ட பிறகே ஸ்குவிட் கேம் திரைக்கதையை வெப் சீரிசாக அதன் இயக்குனர் இயக்கினார். இந்த வெப்சீரிஸ் நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்த சீரிஸின் அடுத்த பாகங்கள் தொடர்பாக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த நிலையில், இந்த சீரிசின் இரண்டு மற்றும் மூன்றாவது பாகங்கள் உருவாகும் என்று அதன் இயக்குனர் ஹாங் தெரிவித்துள்ளார்.