Sowcar Janaki Unknown Facts: தமிழ் சினிமாவை கட்டியாண்ட எம்ஜிஆர், சிவாஜி, தெலுங்கு சினிமாவை கட்டியாண்ட என்டிஆர் ஆகியோருக்கு கதாநாயகியாக நடித்தவருமான செளகார் ஜானகி இன்று காலாமானார். 94 வயதான அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

15 வயதிலே திருமணம்:

 பொதுவாக, சினிமாவைப் பொறுத்தமட்டில் நடிக்க வந்து புகழ்பெற்ற பிறகு திருமணம் செய்து கொண்டு நடிகைகள் ஒதுங்கிக் கொள்வது வழக்கமாக உள்ளது. ஆனால், செளகார் ஜானகியின் வாழ்க்கை இதற்கு முற்றிலும் மாறானது ஆகும். 1931ம் ஆண்டு பிறந்த ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்ட செளகார் ஜானகியின் குடும்பத்தினர் அனைவரும் அப்போதே நன்கு படித்தவர்களாக இருந்தனர்.

ஆனால், பள்ளிப்படிப்பை கூட நிறைவு செய்யாத சூழலில் செளகார் ஜானகிக்கு 15 வயதிலே அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். அசாமில் செளகார் ஜானகியும், அவரது கணவரும் தங்கியிருந்தேபாது கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் செளகார் ஜானகி படிப்பைத் தொடர்ந்துள்ளார். 

Continues below advertisement

குழந்தை பிறந்த பிறகு நடிப்பு:

பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது செளகார் ஜானகிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. சிறு வயதில் இருந்தபோதே நடிப்பில் ஆர்வம் கொண்ட செளகார் ஜானகி தனது கணவருடன் சென்று நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டுள்ளார். அப்போதுதான் என்டி ராமராவ் கதாநாயகனாக நடித்த செளகார் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் அடுத்தடுத்து தெலுங்கிலும், தமிழிலும் வாய்ப்புகள் செளகார் ஜானகிக்கு கிடைத்துள்ளது. அப்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களின் படப்பிடிப்பும் சென்னையிலே நடைபெறுவதால் செளகார் ஜானகி சென்னையிலே குடியேறினார். 

வெற்றிப் படங்கள்:

தமிழில் 1952ம் ஆண்டு வளையாபதி என்ற படம் மூலமாக அறிமுகமான செளகார் ஜானகி பணம் படுத்தும் பாடு, புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், எதிர்நீச்சல், இரு கோடுகள், உயர்ந்த மனிதன், ரத்னகிரி ரகசியம் என அப்போது பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்திருந்தார்.

அந்த காலகட்டத்தில் திரைப்பட பாடகி எஸ்.ஜானகியும் மிகவும் பிரபலமாக இருந்தார். அந்த காலகட்டத்தில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த பிரபலங்களுக்கு கடிதங்கள் எழுதுவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அவ்வாறு ரசிகர்கள் எழுதப்படும் கடிதங்கள் எஸ்.ஜானகிக்கு பதிலாக செளகார் ஜானகிக்கும், செளகார் ஜானகிக்கு வரும் கடிதங்கள் எஸ்.ஜானகிக்கும் மாறி, மாறி சென்ற சுவாரஸ்ய சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகே, அனைத்து ஆவணங்களிலும் தனது பெயரை செளகார் ஜானகி என்றே மாற்றியுள்ளார்.

தனது உடலுக்கு ஹேர் டை ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் திரைப்பட படப்பிடிப்பு இல்லாத தருணங்களில் அதைப் பயன்படுத்துவதை தவிர்த்துள்ளார். மேலும், நரைமுடியில் ஜடை பின்னுவதை  தவிர்ப்பதற்காகவே தனது ஹேர்ஸ்டைலை பாப் ஸ்டைலாக மாற்றிக் கொண்டார்.

70 ஆண்டுகால திரைப்பயணம்:

சமையலிலும், துணி துவைப்பதிலுமே அதிக ஆர்வம் கொண்ட செளகார் ஜானகி தனது 3 மகள்கள், பேரன், பேத்திகள் அனைவரும் ஒன்றாக சேரும்போது அவர்களுக்கு பிடித்த உணவுகளையும் செய்து கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். செளகார் ஜானகியின் சகோதரி கிருஷ்ணகுமாரியும் நடிகை ஆவார். இவரது மூத்த மகள் சென்னையில் செளகார் ஜானகியுடன் இருக்கும் சூழலில், மகள் மற்றும் மகன் அமெரிக்காவில் குடியேறிவிட்டனர்.

1969ம் ஆண்டு கலைமாமணி பட்டம் வென்ற செளகார் ஜானகிக்கு 2022ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர் கடைசியாக தமிழில் பிஸ்கோத் படத்திலும், தெலுங்கில் அன்னி மஞ்சி சகுனமுலே படத்திலும் நடித்துள்ளார். திரையுலகில் 73 ஆண்டுகள் தனது வாழ்வை நிறைவு செய்துள்ளார்.