வளர்ந்து வரும் நடிகை பட்டியலில் இருப்பவர் நடிகை ராஷி கண்ணா. தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் விஷாலுடன் “அயோக்யா”, விஜய் சேதுபதியின் “சங்கத்தமிழன்” , அதர்வாவிற்கு ஜோடியாக “இமைக்கா நொடிகள் “ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதேபோல தெலுங்கில் “பெங்கால் டைகர்”, “வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்”, ”தோழி ப்ரேமா “ , “வெங்கி மாமா “ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் அறிமுக இயக்குநர்கள் பலரிடம் கதைக்கேட்டு வரும் ராஷி கண்ணா, தற்பொழுது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அரண்மணை 3 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில் அவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் ஒன்றில் " சினிமா துறை இன்றும் ஆணாதிக்கம் நிறந்தாகவே உள்ளது , இதில் பெண்கள் தங்களின் எதிர்கால படங்களை மனதில் வைத்துத்தான், தொடர்ந்து பயணித்து வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். ”ஊஹலு குஸகுஸலடே “ என்ற படத்தில் நடித்தபொழுது அது தனக்கு நற்பெயரை கொடுத்ததாகவும் ஆனால் அதற்கு பிறகு தான் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படத்தில் நடிக்கவே முடியவில்லை என வருத்தம் தெரிவித்த ராஷி கண்ணா. கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்து வந்ததால் தன் மீதான  பிம்பம் ரசிகர்கள் மத்தியில் அப்படியே இருந்தது. ஆனால் ”தோழி பிரேமா “ மற்றும் ”பெங்கால் டைகர்” போன்ற படங்களுக்கு பிறகுதான் தனக்கு நடிக்க தெரியும் என ரசிகர்கள் ஒப்புக்கொண்டதாகவும் மனம் திறந்து பேசியுள்ளார் ராஷி கண்ணா. 




மேலும் தெலுங்கு சினிமாவில் ஒரு நடிகை  வெற்றி பெற வேண்டுமானால் அவர்கள்  அனுஷ்கா மற்றும் சமந்தா  போல சிறந்த நடிகைகளாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் இங்கு கோலோச்ச முடியும் என தெரிவித்த ராஷி கண்ணா, தென்னிந்திய சினிமாவின் பிம்பத்தை மாற்றிய பெருமை இவர்கள் இருவருக்கும்  உண்டு என பெருமிதம் தெரிவித்தார். நடிகை என்றால் அழகாக இருக்க வேண்டும், நன்றாக நடனம் ஆட தெரிய வேண்டும் என்ற நிலை இருக்கிறது , இது எல்லாவற்றையும் தாண்டி சிறந்த நடிப்புத்திறமை வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து பயணிக்க முடியும், எனவே  நான் தொடர்ந்து பயணிக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளதாக தெரிவித்தார்.


கொரோனா பேரிடர் காலங்களில் , தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து  ராஷி கண்ணா ஏழை , எளிய மக்களுக்கு உணவுகளை வழங்கி வந்தார்.  மேலும் பி த மிராக்கிள் என்ற முன்னெடுப்பின் மூலம் பலருக்கு உதவிகள் செய்து வருகிறார்.  கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் “ பசியால் வாடும் யாராவது  ஒருவருக்கு ஒரு வேளை உணவளிக்க முன் வாருங்கள்” என அவர் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.