இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும், படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது.
சவுரவ் கங்குலி:
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்து, விருப்பத்தின் பேரில் கிரிக்கெட்டை தேர்வு செய்து, தனது திறமையால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உருவெடுத்தவர் சவுரவ் கங்குலி. வீட்டில் மகாராஜா என செல்லமாக அழைக்கப்பட்டாலும், களத்தில் அவரது செயல்பாட்டால் ரசிகர்கள் வைத்த செல்லப்பெயரான ”தாதா” தான் கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலம். இந்திய கிரிக்கெட் அணி இன்று ஆலமரம் போன்று பரந்து, விரிந்து வலுவாக காணப்படுகிறது என்றால், அதற்கு விதை போட்டது கங்குலி தான். இந்த நிலையில், அவரது வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு புதிய படம் உருவாக உள்ளது.
ஹீரோ யார்?..படப்பிடிப்பு எப்போது?
கங்குலி வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகும் புதிய படத்திற்கான, படப்பிடிப்பு நடப்பாண்டு இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அங்குர் கார்க் மற்றும் லவ் ரஞ்சன் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை, இரண்டு பேர் இயக்க உள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கங்குலியின் கதாபாத்திரத்தில் நடிக்க, ரன்பீர் கபூர் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
தயாராகும் திரைக்கதை:
இதனிடையே, கங்குலியின் படத்திற்கான திரைக்கதையை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இரண்டு இயக்குனர்கள் கங்குலியின் வீட்டிற்கு சென்று, அவர் தொடர்பான பல்வேறு தகவல்களை சேகரித்துள்ளனர். சவுரவ் கங்குலியின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை கொண்டு, கதை எழுதும் பணி ஏற்கனவே பூர்த்தியடைந்துள்ளது. அதனை மேலும் சுவாரஸ்யமாக்கவும், பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் கங்குலியின் வாழ்க்கையைப் பற்றிய பல்வேறு தகவல்களையும் இயக்குனர்கள் சேகரித்து வருகின்றனர். இதற்காக, கங்குலியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் மனைவி டோனா ஆகியோரிடமிருந்தும் கங்குலி தொடர்பான பல்வேறு விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தோனியின் சாதனை:
பல்வேறு விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி திரைப்படங்கள் உருவாவது ஒன்றும் இந்தியாவில் புதியதல்ல. ஆனால், அதில் பெரும் வெற்றி பெற்றது என்றால் அது சுசாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில், கடந்த 2016ம் ஆண்டில் வெளியான தோனி - தி அண்டோல்ட் ஸ்டோரி திரைப்படம் தான். தோனியை அச்சு அசலாக திரையில் காட்டி நடிப்பில் அசத்தினார் சுசாந்த் சிங். இந்த திரைப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருந்த நிலையில், சுசாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.