தென்னிந்திய சினிமா உலகில் டாப் நடிகைகளுள் ஒருவராக வலம் வந்த நடிகை சௌந்தர்யாவை நினைவுகூர்ந்து நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.


உச்ச நட்சத்திரங்களின் விருப்ப நடிகை


தென்னிந்திய சினிமாக்கள் முதல் இந்தி திரையுலகம் வரை உச்ச நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கோலோச்சிய நடிகைகளுள் முக்கியமானவர் நடிகை சௌந்தர்யா. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவரான நடிகை சௌந்தர்யா, கன்னடத்தில் காந்தர்வா எனும் திரைப்படத்தில் 1992ஆம் ஆண்டு அறிமுகமானார்.


தொடர்ந்து 1993ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக் ஜோடியாக பொன்னுமணி படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான சௌந்தர்யா, “நெஞ்சுக்குள்ளே இன்னாருனு” பாட்டின் மூலம் இன்றளவும் அறியப்படுகிறார்.


அம்மன் முதல் தவசி வரை


அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பிஸியாக வலம் வந்த சௌந்தர்யா, 1995ஆம் ஆண்டு ‘அம்மன்’ திரைப்படத்தில் தீவிர அம்மன் பக்தையான பவானி கதாபாத்திரத்தில் நேரடி தெலுங்கு படத்தில் நடித்து பெரும் பிரபலமானார்.


இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.  பின் 1996ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்துடன் அருணாச்சலம் படத்தில் ஜோடி சேர்ந்த சௌந்தர்யா, தொடர்ந்து நடிகர் கமல் உடன் 1998ஆம் ஆண்டு காதலா காதலா படத்திலும் ஹீரோயினாக நடித்தார்.


படையப்பா, தவசி ஆகிய படங்களில் அன்றைய உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜயகாந்துடன் தமிழில் ஜோடி சேர்ந்த சௌந்தர்யா, இந்தியில் நடிகர் அமிதாப் பச்சன் உடன் சூர்யவன்ஷம் (சூர்ய வம்சம் இந்தி ரீமேக்) உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் உடனும் நடித்து டாப் ஹீரோக்களின் விருப்ப நடிகையாக வலம் வந்தார்.


ஏற்க முடியாத இழப்பு!


தொடர்ந்து 2003ஆம் ஆண்டு ரகு எனும் பொறியாளரை மணந்து திருமண வாழ்வில் செட்டில் ஆன  நடிகை சௌந்தர்யா, அதன் பின் சமூகசேவைப் பணிகள் மற்றும் அரசியல் களத்தில் பிஸியானார்.


2004ஆம் ஆண்டு பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்காக கரீம்நகரிலிருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் பயணித்த சௌந்தர்யா, எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த கோரவிபத்தில் சிக்கி உயிரிழந்தார். தன் 27 வயதில், கர்ப்பிணியாக இருந்தபோது விமான விபத்தில் சிக்கி சௌந்தர்யா அகால மரணமடைந்தது ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் இன்று வரை கவலைப்பட வைத்து வருகிறது.


நினைவுகூர்ந்த பார்த்திபன்!


நேற்று முன் தினம் நடிகை சௌந்தர்யாவின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், சௌந்தர்யாவை நினைவுகூர்ந்து பிரபல நடிகர் பார்த்திபன் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சௌந்தர்யாவுடன் அந்தப்புரம், இவன் ஆகிய படங்களில் சௌந்தர்யாவுடன் ஜோடி சேர்ந்து பார்த்திபன் நடித்துள்ளார்.


இந்நிலையில், “நினைவு தினம்? நினைவு  தினம்!” எனக் குறிப்பிட்டு நடிகை சௌந்தர்யாவின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் நடிகர் பார்த்திபன்.






ஏற்கெனவே சௌந்தர்யா போன்ற வெளிநாட்டு விமான பணிப்பெண் ஒருவரை சந்தித்தது குறித்து நடிகர் பார்த்திபன் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.