சார்லஸ் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'சொப்பன சுந்தரி' திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை, வடபழனியில் உள்ள விஜயா மாலில் நேற்று (மார்ச்.02) நடைபெற்றது.
லாக் அப் திரைப்படத்தை இயக்கிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா, தீபா, நடிகர்கள் கருணாகரன், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ள படம் ‘சொப்பனசுந்தரி’.
ஹியூபாக்ஸ் ஸ்டுடியோ - ஹம்சினி எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில், டார்க் காமெடி ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. அஜ்மல் தஹ்சீன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பாலமுருகன் - விஷ்ணு கோபாலன் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று விஜயா மாலில் நடந்த இந்த விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லஷ்மி ப்ரியா உள்ளிட்ட படக்குழுவினருடன், இயக்குனர் மோகன் ராஜா கலந்து கொண்டார். அப்போது இயக்குனர் மோகன் ராஜா பேசியதாவது: “வேலைக்காரன் திரைப்படத்திற்கு என் இணை இயக்குநராக இருந்தவர் இன்று சொப்பன சுந்தரி திரைப்படத்தை இயக்கியுள்ளார். வேலைக்காரன் நன்றாக வந்ததற்கு முக்கியமான காரணம் பிரபு. லாக் டவுன்லயும் லாக் அப் எனும் படத்தை பிரபு செய்திருக்கிறார். லாக் அப்பை விட இது சிறப்பாக வந்திருப்பதாக பிரபுவே சொல்லியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு என்றும் ஒரு மார்க்கெட்டை உண்டு பண்ணியிருக்கிறார்.
சமீபத்தில் மொக்க திரைப்படம் என்று படங்களை வகைப்படுத்தி இந்தப் படங்களைப் பார்ப்பதை சொல்வதற்கு கூட பயப்படுகிறார்கள். மொக்க படத்திற்கு செல்வது தப்பே இல்லை. படத்தை ரசிகர்கள் தான் பார்த்துவிட்டு மொக்கையா, இல்லையா என்று சொல்லவேண்டும். விமர்சகர்களால் படத்துக்கு நிறைய நல்லது நடக்கிறது. ஆவ்ரேஜ் படம் என்ற ட்ரெண்ட் இல்லாம்ல் போய்விட்டது. ஒன்று சூப்பர் ஹிட் படம் அல்லது அட்டர் ஃப்ளாப் படம் வருகிறது.
லாக்கப் திரைப்படத்தில் எனக்காக எழுதிய கதாபாத்திரத்தில் தான் வெங்கட் பிரபு நடித்தார். தனி ஒருவன் திரைப்படம் குறித்து இந்த ஆண்டு அல்லது அடுத்தாண்டிற்குள் எதிர்பார்க்கலாம்” என்றார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியபோது, “எனக்கு கனா திரைப்படம் கொடுத்த அருண் ராஜா, க.பெ.ரணசிங்கம் கொடுத்த விருமாண்டி மற்றும் இந்தத் திரைப்படம் கொடுத்த சார்லஸ் என இயக்குனர்களே எனது பக்கபலம். ஒரு நடிகையை எப்படிக் கொண்டாடுவார்கள் எனத் தீர்மானிப்பது இயக்குனர்கள் தான்.
என்னுடைய கரியரில் சீரியஸ் படங்கள் தான் அதிகம் செய்துள்ளேன். எனவே ஒரு காமெடி படம் முயற்சி பண்ணலாமா என்று தோன்றியது. ஆடியன்ஸை அழ வைப்பதுகூட ஈஸி, சிரிக்க வைப்பது கஷ்டம்.
இந்தப் படத்தில் சார்லஸ் சொல்லிக்கொடுத்ததை அப்படியே ஈயடிச்சான் காப்பி அடித்து நடித்தேன். இந்தப் படம் சார்லஸூக்கு ஒரு பெரிய ஓப்பனிங் கொடுத்து என் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு பெரிய படம் எடுக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்
என்னை வைத்து இந்தப் படத்தை இயக்க மாட்டேன் என்று இயக்குனர் சொல்லிவிட்டார். நான் கோபத்தால் நிறைய இழந்துள்ளேன்” என ஐஸ்வர்யா ராஜேஷ் பேசினார்.
இந்த விழாவைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில் பெண்கள் தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
கனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா ஆகிய கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். முன்னதாக இப்படத்தின் முதல் பாடலான பணக்காரி பாடல் இணையத்தில் வெளியாகி கவனமீர்த்தது குறிப்பிடத்தக்கது.