சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகள் வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என நடிகர் சோனுசூட் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள  சண்டிகர் பல்கலைக்கழகக்தின் விடுதியில் பல மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இங்கு தங்கி படிக்கும் எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் அங்குள்ள பாத்ரூமில்  சக மாணவிகள் குளிக்கும் காட்சிகளை பதிவு செய்து ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார். நீண்ட நாள்களாக இச்சம்பவம் நடந்து வந்த நிலையில், சுமார் 60 மாணவிகளின் வீடியோக்கள் இணையத்திலும் கசிந்தது. 






இதனைக் கண்ட சம்பந்தப்பட்ட மாணவிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இச்செயலில் ஈடுபட்ட மாணவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்கலைக்கழகத்தில் மாணவிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில்  சில பெண்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.  இதனையடுத்து 354சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த மாணவியை கைது செய்தனர். 






இது மிகவும் சென்சிட்டிவ் ஆன விஷயம் என்பதால் கவனத்துடன் கையாள்வதாக அம்மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் தெரிவித்துள்ளார். அதேசமயம் சண்டிகர் பல்கலைகழக மாணவர்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகள் யாரும் தப்பிக்கமாட்டார்கள். நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் கண்ணியம் தொடர்பான விஷயம் இது. இது மிகவும் உணர்ச்சிகரமான விஷயம்.  ஊடகங்கள் உள்பட நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 






இந்நிலையில் பிரபல நடிகர் சோனுசூட் தனது ட்விட்டர் பக்கத்தில், சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நாம் நமது சகோதரிகளுடன் நின்று பொறுப்புள்ள சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நேரம் இது. இது நமக்கு சோதனையான காலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்ல. பொறுப்புள்ளவராய் இருங்கள் என தெரிவித்துள்ளார்.