பாலிவுட் நடிகை சோனாலி பெந்த்ரே தனது கணவர் கோல்டி பேலுக்கு திருமண நாள் வாழ்த்துச் சொன்ன வீடியோ இன்ஸ்டாவில் ஹிட்டாகி உள்ளது.


சோனாலி பெந்த்ரே, நமக்கெல்லாம் காதலர் தினம் படம் வாயிலாக அறிமுகமானார். என்ன விலை அழகே.. உன்னை விலைக்கு வாங்க வருவேன் என்ற பாடலில் அவரது அழகு அவ்வளவு அம்சமாக இருக்கும். தமிழில் நிறைய படங்கள் நடிக்காவிட்டாலும் பாலிவுட்டில் அவர் நிச்சயமாக பிரபலம் தான். பிரபல நட்சத்திரமாக மின்னிய போதுதான் கோல்டி பேல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கோல்டி பேல், சினிமா படத் தயாரிப்பாளர். இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். சமீபத்துல் சோனாலி பெந்த்ரேவுக்கு புற்றுநோய் உறுதியானது. இதற்காக வெளிநாட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்றார். அவருக்கு அப்போது ஒட்டுமொத்த பாலிவுட்டும் துணை நின்றது. நோயிலிருந்து மீண்டு வந்த அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.


இந்நிலையில், அவர் தனது கணவருடன் திருமண நாளைக் கொண்டாடியுள்ளார். இது அவர்களின் 19வது திருமண நாள். இதனையொட்டி இருவரும் எடுத்துக் கொண்ட காதல் ததும்பும் ஃபோட்டோக்களை தொகுத்து ஒரு வீடியோவாக இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இருவரின் பார்வைகளும் பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொள்ள காண்போரை நெகிழச் செய்கிறது. அந்தப் படத்தில் கீழ் பாலிவுட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பலரும் சோனாலி நோயை துணிச்சலாக எதிர்கொண்டதை சுட்டிக்காட்டும் வகையில் ப்ரேவ் கேர்ள் எனப் பதிவிட்டுள்ளனர்.


சோனாலியை சந்தித்தது எப்படி?


சோனாலியை எங்கே எப்படி சந்தித்தேன் என்பது குறித்து கோல்டி பேல் முன்னர் கொடுத்திருந்த சுவாரஸ்யப் பேட்டி ஒன்று இங்கே நினைவுகூரத் தக்கது. நான் சோனாலியை நாராசா பட செட்டில் தான் முதன்முதலில் பார்த்தேன். அப்போது அவரை எனக்குத் தெரியாது. அவரை நான் செட்டில் சந்த்தித்தேன் எனக் கூறுவதைவிட ஏதோ வேளையில் மூழ்கிக் கொண்டே அவர் மீது மோதிவிட்டேன். அப்படித்தான் எங்களின் சந்திப்பு நிகழ்ந்தது. என் தங்கைக்கு அவர் தோழி. அப்படித்தன நட்பானோம். நாங்கள் இருவரும் அதிகமாகப் பேசிக் கொண்டது உணவைப் பற்றித்தான். நீண்ட கார் பயணங்கள் செல்வோம்.


அப்போது உணவு, அரசியல் பற்றி பேசுவோம். முதலில் எங்களுக்குள்ளான நட்பின் ஊடே இருந்த காதலை நான் உணர்ந்தேன். ரொம்ப நாளாக அது ஒருதலை காதலாகவே இருந்தது. சோனாலி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நானும் விடுவதாக இல்லை. என் அம்மாவும், சோனாலி நல்ல பெண் விட்டுவிடாதே.. திருமணம் செய்து கொள் என்றார். அவர் சொன்னதில் நான் கேட்ட ஒரே விஷயம் அதுதான். நல்லவேளை அவர் பேச்சைக் கேட்டேன். இன்று சோனாலி எனக்கு ஒரு அன்புத் தோழி என்று அந்தப் பேட்டியில் கூறியிருப்பார். 19 ஆண்டுகள் திருமண பந்தத்துக்கு இதுவே சாட்சி என்றால் அது மிகையாகாது.