என்ன விலை அழகே என்று அவருக்காகவே எழுதியது போல் ஒரு தமிழ் பாடலில் அழகுப் பதுமையாக உலா வந்தவர் சோனாலி பிந்த்ரே. பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்தார்.


சினிமாவில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கும்போதே 2002 ஆம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான கோல்டி பெஹல்லை திருமணம் செய்து இல்லற வாழ்கையில் இணைந்தார்.  இந்தத் தம்பதியினருக்கு 2005 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்துக்கு பின்பு திரைப்படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார் சோனாலி. அவ்வப்போது இந்தி தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார்.


ஆனால் அவரை புற்றுநோய் புரட்டிப் போட்டது. தன் வாழ்க்கையை பி.சி, ஏ.சி என்று பிரித்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார் சோனாலி பிந்த்ரே. ஆமாம், கேன்சருக்கு முன், கேன்சருக்குப் பின் என்பதையே அவர் இப்படிச் சொல்லியுள்ளார். மேஷபிள் இந்தியா என்ற நிகழ்ச்சியில் ஒரு கலந்துரையாடலில் சோனாலி பிந்த்ரே பங்கேற்றார். 


அதில் சோனாலி பிந்த்ரே, "என் கணவர் கோல்டியும் நானும் என் வாழ்க்கையை கேன்சருக்குப் பின், கேன்சருக்கு முன் என்று பிரித்துக் கொள்ளலாம் என்று பேசிக் கொள்வோம். அந்த அளவுக்கு கேன்சர் நோய் எங்களை புரட்டிப் போட்டுவிட்டது. எப்போதெல்லாம் வாழ்க்கையில் கடுமையான காலங்கள் வருகிறதோ அப்போதெல்லாம் நாம் அதில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்வோம். அப்படியும் கூட பாடம் கற்கவில்லை அது உங்களின் துரதிர்ஷ்டம் என்றே சொல்வேன். எங்களுக்கு கேன்சர் நோய் நிறைய பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. அந்தப் பயணத்தில் நாங்கள் ஒருவொருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்தோம்.




கேன்சர் உறுதியானதும் உடைந்துபோனோம். ஆனால் நான் அதிலிருந்து பிழைத்துவிட்டேன் என்பதை நினைத்து நான் நன்றி சொல்லாத நாளில்லை.


நியூயார்க் நகரில் தான் கேன்சர் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் 23 முதல் 24 அங்குலம் அளவிற்கு எனக்கு தழும்பு ஏற்பட்டுள்ளது. எனது அறுவை சிகிச்சை முடிந்தவுடனேயே மருத்துவர்கள் எவ்வளவு சீக்கிரம் எழுந்து நடக்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் நீங்கள் வீடு திரும்பலாம் என்பதே. கிளினிக்கல் இன்ஃபக்‌ஷன் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மருத்துவர்கள் உறுதியாக இருந்தனர். நான் மருத்துவர்களுக்கு ஒத்துழைத்தேன். சிகிச்சை எனக்கு பலனளித்தது. அறுவை சிகிச்சை முடிந்த 24வது மணி நேரத்தில் நான் காரிடாரில் நடக்க ஆரம்பித்தேன். இப்போது வேலையிலும் ஈடுபட ஆரம்பித்து விட்டேன். ஜீ5 ஓடிடி தளத்தில் நான் தி ப்ரோக்கன் நியூஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகிறேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.


சோனாலி பிந்த்ரே தனக்கு புற்றுநோய் பாதித்த பின்னர் இன்ஸ்டாகிராமில் மோட்டிவேஷன் வார்த்தைகளை அன்றாடம் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.