'காதலர் தினம்' ரோஜாவை அவ்வளவு எளிதில் யாராவது மறந்து விட முடியுமா? அந்த அளவிற்கு ஒரு பொருத்தமான கதாபாத்திரத்தின் பெயரால், நம் அனைவரையும் 'ரோஜா ரோஜா.." என கொஞ்ச காலமாக நம்மை எல்லாம் ஆட்டிப்படைத்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே.
நடிகை சோனாலி பிந்த்ரே- கோல்டி பேல் தம்பதியினரின் திருமண நாளான இன்று. இந்த நாளை முன்னிட்டு, நடிகை சோனாலி பெந்த்ரே தனது கணவருடன் இருக்கும் அழகான அன்றும் இன்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்து அவர்களின் திருமண நாளை மகிழ்ச்சியோடு நினைவு கூறுகிறார்.
திருமண வைபவம் :
நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளாரான கோல்டி பேல் இருவருக்கும் 2002ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து கொண்ட நடிகை சோனாலி அவ்வப்போது இந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார்.
தமிழில் 'காதலர் தினம்' திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகி ஒரே படத்தில் பிரபலமானாலும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வந்தவர். உச்ச நட்சத்திரமாக இருக்கும் போது தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார்.
சோனாலிக்கு நேர்ந்த சோகம் :
மிகவும் சந்தோஷமாக இருந்து வந்த அவர்களின் திருமண வாழ்க்கையில் புயல் வீசியது போல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் மனவேதனையில் இருந்தார். அமெரிக்காவிலேயே தங்கி இருந்து தகுந்த சிகிச்சையை எடுத்துக்கொண்டு தற்போது, அதில் இருந்து மீண்டு சகஜமான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமே அவருக்கு உறுதுணையாய் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றும் இன்றும் புகைப்படங்கள் :
மீண்டும் தனது சந்தோஷமான வாழ்க்கையை தொடங்கியுள்ள நடிகை சோனாலி பிந்த்ரே - கோல்டி பேல் தம்பதியின் 20ம் ஆண்டு திருமண நாளான இன்று தங்களது திருமணத்தின் போது எடுத்து கொண்ட புகைப்படம் முதல் சமீபத்திய புகைப்படம் வரை பகிர்ந்து அவர்களின் இனிமையான பயணத்தை அழகாக பகிர்ந்து 20 ஆண்டுகளாக அன்றும் இன்றும் என்ற குறிப்பையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார் சோனாலி பெந்த்ரே. இந்த துணிச்சலான பெண்மணிக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.