சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய பாலா, அறந்தாங்கி நிஷா இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என சமூக வலைத்தள பிரபலம் ஜி.பி.முத்து தெரிவித்துள்ளார்.


நடப்பாண்டு டிசம்பர் மாதம் முதல் வாரம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக்ஜாம் புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதேபோல் டிசம்பர் 3வது வாரம் நெல்லை,கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. 


இதனிடையே சின்னத்திரை பிரபலங்களான பாலா, அறந்தாங்கி நிஷா இருவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தனர். அந்த வரிசையில் சமூக வலைத்தள பிரபலம் ஜி.பி.முத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார். முன்னதாக ஜிபி முத்து தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள உடன்குடியை சேர்ந்தவர் என்பதால் பாதிப்பின் தன்மையை தெரிந்திருந்தார். அவர் மக்களுக்கு உதவி வருவது பாராட்டை பெற்றுள்ளது. 


இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேட்டியளித்துள்ள ஜி.பி.முத்து, “வரலாறு காணாத மழையால் நான் இருக்கும் உடன்குடி அதிகம் பாதிப்பில்லை. அதனை சுற்றியுள்ள இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நான் காரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்தேன். ஏரல், ஆத்தூர் ஆகிய இடங்களில் மிகப்பெரிய அளவில் அழிந்துள்ளது. 4, 5 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலமே இடிந்து போய் விட்டது. ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் பகுதிக்கு சென்ற போது குழிக்குள் என்னுடைய கார் சிக்கிக் கொண்டது. நான் என்னால் முடிந்த அளவுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் எல்லாம் அடங்கிய பொருட்கள் எல்லாம் வாங்கி கொடுத்துள்ளேன். என்னுடைய வீடு ஓட்டு வீடு தான். அங்கங்கு கொஞ்சம் ஒழுகும். ஆனால் பெரிய அளவில் மழையால் பாதிப்பில்லை. 


நான் எப்படி வளர்ந்து வந்தேன் என்பது எல்லா மக்களுக்கும் தெரியும். கொரோனா காலத்தில் நான் தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்தேன். பின் மருத்துவனையில் சிகிச்சைக்கு சென்று வந்த பின் என் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கு என்னால் முடிந்த அளவு உதவினேன். அப்ப இருந்தே இயன்ற அளவு உதவி செய்கிறேன். நான் மட்டுமல்லாமல் என்னுடைய குழந்தைகளையும் உதவி செய்ய அழைத்து சென்று நாளைக்கு என்னைப் போல அவர்களும் உதவ வேண்டும் என நினைத்தேன். சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்பை டிவியில் பார்த்தேன். ஆனால் நேரில் வந்து உதவ முடியாத சூழல் ஏற்பட்டது. எனக்கு சென்னையைப் பற்றி தெரியாது. 


கேபிஒய் பாலா, அறந்தாங்கி நிஷா போன்றவர்கள் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்தார்கள். ஆனால்  வர முடியவில்லை. இப்போ நம்ம மக்கள் பாதிகப்பட்டுட்டாங்க. அதனால் நானும் உதவினேன். பாலா, நிஷா எல்லாரும் செய்வதை பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. நாம் பேச்சை சாதாரணமாக சொல்லி விடலாம். ஆனால் தண்ணீருக்குள் இறங்கி சென்று உதவியதற்காகவே நல்லா இருக்கணும்” என தெரிவித்துள்ளார்.