சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 21 படத்திற்கு அமரன்   என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது.


எஸ்.கே 21


மாவீரன் , அயலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் எஸ்.கே 21. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். சாய் பல்லவி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.  நாளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் வீடியோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு  அமரன் என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது.


அமரன்


கடந்த ஆண்டு மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படம்பிடிக்கப் பட்டன. இப்படத்தில் சிவகார்த்திகேயன் இரண்டு கெட் அப் களில் நடித்துள்ளார். இதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை கூட்டியும் குறைத்தும் இருக்கிறார். ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் இப்படத்தில் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் இப்படத்தில் கெளரவத் தொற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.


மாஸ் ஹீரோவாக மாறிய சிவகார்த்திகேயன்






சின்ன சின்ன காமெடி கதாபாத்திரங்களில் நடித்து இன்று முன்னணி நட்சத்திரமாக சிவகார்த்திகேயன் இருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் போன்ற காமெடியான படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்றன. இதனையடுத்து மாஸான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் போது அவர் மேல் பலவிதமான விமர்சனங்கள் வந்தன. இவருக்கு எல்லாம் காமெடி சப்ஜெக்ட் தான் செட் ஆகும் என்று பலர் கூறினார்கள். சிவகார்த்தியேன் நடித்த காக்கி சட்டை மாதிரியானப் படங்களில் அவரை ஒரு மாஸ் ஹீரோவாக பார்க்க முடியவில்லை என்கிற கருத்து பரவலானது.


இதனைத் தொடர்ந்து முழுவதுமான ஆக்‌ஷன் படங்களாக இல்லாமல் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து அதன் மூலம் தனது கரியரில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார் சிவகார்த்திகேயன், வேலைக்காரன், ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை , டான், மாவீரன் , அயலான்  மாதிரியான படங்கள் அவரை குடும்ப ரசிகர்களுக்கான நடிகராக மாற்றியுள்ளது. தற்போது இப்படத்தில் முழுக்க முழுக்க ஆக்‌ஷனில் அவர் இறங்கியுள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு மாஸான இமேஜை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.