காந்தாரா முதல் பாகத்தின் பான் இந்திய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் அதி பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் 2 ஆம் தேதி உலகளவில் காந்தாரா சாப்டர் 1 வெளியாக இருக்கும் நிலையில் செப்டம்பர் 22 ஆம் தேதி படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட இருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது
அக்டோபர் 2 வெளியாகும் காந்தாரா சாப்டர் 1
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் காந்தாரா. ஹாம்பேல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்தது. 16 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த கன்னட படம் பான் இந்திய அளவில் வெற்றிபெற்று 400 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய மறுத்துவிட்டார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. நாட்டார் தெய்வங்களை மையப்படுத்திய கதையும் அதை காட்சிபடுத்திய விதமும் இப்படத்தை இந்திய அளவில் கொண்டு சேர்த்தது.
அதே நாட்டார் தெய்வங்களின் கதையை வைத்து தற்போது இப்படத்தின் முந்தைய பாகமாக உருவாகியுள்ளது காந்தாரா சாப்டர் 1. முதல் படத்தைக் காட்டிலும் பலமடங்கு அதிக பட்ஜெட்டில் இந்த பாகம் உருவாகியுள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்க மேலும் பல நடிகர்கள் படத்தில் நடித்துள்ளார்கள். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் படம் உலகளவில் வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தின் வெற்றியால் தற்போது இரண்டாம் பாகத்திற்கு வனிக ரீதியாக மிகப்பெரிய வரவேற்பும் இருந்து வருகிறது.
காந்தாரா சாப்டர் 1 டிரெய்லர்
இப்படத்தின் டிரெய்லர் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஒவ்வொரு மொழியிலும் அந்த துறை சார்ந்த நட்சத்திரங்கள் படத்தின் டிரெய்லரை வெளியிட இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியில் இப்படத்தின் டிரெய்லரை நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் வெளியிட இருக்கிறார். தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் டிரெய்லரை வெளியிட இருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழில் கமர்சியல் பரப்பில் அடுத்தகட்டத்தை நோக்கி சென்று வரும் சிவகார்த்திகேயன் பான் இந்திய அளவில் பிரபலமான படத்தின் டிரெய்லரை வெளியிடுவது இதுவே முதல் முறை. இது அவரது கரியரில் அவருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் என சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
சிவகார்த்திகேயன் நடித்து அண்மையில் வெளிவந்த மதராஸி திரைப்படம் உலகளவில் ரூ 100 கோடி வசூல் ஈட்டியது குறிப்பிடத் தக்கது.