தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் டாக்டர், டான் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். சமீப காலமாக அவரின் படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது. தனக்கென ஏராளமான ரசிகர்களை கொண்ட சிவகார்த்திகேயன் கேரியர் கிராப் அதிகரித்து கொண்டே வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 


வசூலில் தூள் கிளப்பும் சிவா :


அக்டோபர் 21ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கும் சிவகார்த்திகேயனின் "பிரின்ஸ்" திரைப்படம் படம் வெளியாவதற்கு முன்னரே சுமார் 100 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  அதனை தொடர்ந்து மாவீரன், அயலான் என அடுத்தடுத்து நம்முடைய பிரின்ஸ் மிகவும் பிஸியாக உள்ளார். இதனால் அவரின் கிராக்கி அதிகரித்து கொண்டே போகிறது.


 



 


கிரிக்கெட் வீரர் பயோபிக் : 


தற்போது கோலிவுட்டில் சிவகார்த்திகேயன் குறித்து ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர் டி.நடராஜனின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக் படமாக உருவாகவிருக்கும் திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் என்பதுதான் அந்த சலசலப்புக்கு காரணம். இப்படத்தில் நடிப்பதற்காக அவருக்கு இதுவரையில் தனது திரை வாழ்வில் பெறாத அதிக அளவிலான சம்பளத்தை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 






இளைஞர்களுக்கு ஓர் ரோல் மாடல் :
 
தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாநிலத்திற்கு அருகில் உள்ள சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தில் ஒரு நெசவாளரின் மூத்த மகனாக பிறந்தவர் நடராஜன். அவரது தயார் பல ஆண்டு காலமாக சாலை ஓரமாக  உணவு கடை நடத்தி வந்தவர். தனது 30 வயதில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டில் வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் கிங்ஸ் XII பஞ்சாப் அணிக்காக விளையாடிய போது மிக சிறப்பாக விளையாடி மூன்று கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார். அதனை தொடர்ந்து சர்வதேச அரங்கிலும் தன்னை நிரூபித்தார். மிகவும் சாதாரண ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு நட்சத்திர கிரிக்கெட் வீரராக உயர்ந்தது அன்றைய இளைஞர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது.






லட்சியத்தில் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர்:


கிராமப்புறங்களில் கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்டுவதையும், பின்தங்கியவர்களுக்கு பயிற்சியாளராக வேண்டும் என்பதை தனது லட்சியமாக கொண்டிருந்தார். இதற்கு முன்னர் தனது பயோபிக்கை படமாக்கும் உரிமையை வழங்காமல் இருந்தவர் தற்போது அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது. கிரிக்கெட் வீரர் டி.நடராஜன் பயோபிக் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.