நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் 2 நாட்களில் ரூ.50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Continues below advertisement

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்

2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள படம் “பராசக்தி”. இயக்குநர் சுதா கொங்காரா  இயக்கத்தின் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நடிகர் ரவி மோகன் வில்லனாக இடம்பெற்றுள்ளார். மேலும் அதர்வா முரளி, ஸ்ரீலீலா, பைசல் ஜோசப், சேத்தன், குரு சோமசுந்தரம், பிரித்வி பாண்டியராஜன், ராணா டகுபதி என ஏகப்பட்ட பேர் நடித்துள்ளனர். 

இந்த படம் ஜனவரி 10ம் தேதி வெளியான நிலையில் 1965ம் ஆண்டு தமிழ்நாட்டில் வெடித்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. 25 இடங்களில் சென்சார் போர்டு கட் கொடுத்த நிலையில் ரிலீசுக்கு ஒருநாள் முன்பு தான் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்தது. 

Continues below advertisement

கலவையான விமர்சனம்

இந்த நிலையில் பராசக்தி படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் போன்ற தமிழ்நாட்டின் வரலாறு தெரிந்தவர்கள் இப்படத்தை கொண்டாடி மகிழ்கின்றனர். ஆனால் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்கள் ஏமாற்றமடைந்து நெகட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பராசக்தி படம் பற்றிய பேச்சு தான் சென்று கொண்டிருக்கிறது. 

அதிகரிக்கும் வசூல்

இந்த நிலையில் பராசக்தி படம் நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். இதனால் இப்படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். எனினும் முதல் நாள் வரை படம் ரிலீசாகுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அன்று மாலை தான் பல தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இதனால் முதல் நாள் முதல் காட்சியே பல தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் ஆகாமல் இருந்தது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

ஆனால் பராசக்தி படம் முதல் நாளில் ரூ.27 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக டான் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனிடையே 2வது நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால் இப்படம் 2 நாட்களில் ரூ.50 கோடி வசூலை கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே உண்மையான நிலவரம் தெரிய வரும். 

இன்று முதல் வேலை நாட்கள் என்பதாலும், பொங்கல் பண்டிகை முன்னேற்பாடுகளில் மக்கள் ஈடுபடுவதாலும் புதன் கிழமை வரை வசூல் குறையும் என தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி 15ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி நிச்சயம் படம் வசூலை அள்ளும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.