ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. திரைக்கதை மீது பலருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் சிவகார்த்திகேயனை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக முழுவதுமாக முன் நிறுத்துகிறது மதராஸி. படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருந்தாலும் ஃபேமிலி ஆடியன்ஸூக்கு ஏற்றபடி இப்படத்தில் செண்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை காட்சிகளும் இருப்பது படத்தின் வெற்றிக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அதே நேரத்தில் நம் பெரிதும் கவனிக்காத இடங்களில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இப்படத்தில் உள்ளன
துப்பாக்கியில் இஸ்லாமியர்கள் மதராஸியில் வட சென்னை மக்கள்
முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் கமர்சியலாக மிகப்பெரிய வெற்றி என்றாலும் இப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்த விதம் சர்ச்சைக்கு உள்ளானது. ஏற்கனவே சமூகத்தில் நிலவும் மதச்சார்பை ஊக்குவிக்கும் விதமாகவே இப்படத்தில் இஸ்லாமியர்கள் சித்தரிக்கப் பட்டிருந்தார்கள். அதே போல் மதராஸி படத்திலும் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளன.
தமிழ்நாட்டில் ஆயுதங்களை விற்பனை செய்ய வருகிறது ஒரு பெரிய மாஃபியா கும்பல். முதற்கட்டமாக ஒவ்வொரு மாநிலத்திலும் 100 துப்பாக்கிகளை இலவசமாக வழங்குகிறார்கள். இந்த காட்சியின் தொடக்கமே குப்பை மேட்டில் இருக்கும் சிலர் துப்பாக்கி வாங்குவதாகவும், வட சென்னை மொழி பேசுபவர்கள் கஞ்சா அடித்துக் கொண்டு துப்பாக்கிகளை வாங்குவதாகவும் தான் இருக்கிறது. ஒரு சில நொடிகளில் கடந்து போகும் இந்த காட்சிகளில் ஒரு குறிப்பிட்ட மக்களை ஆபத்தானவர்களாக சித்தரித்து விடுகிறார்கள். இந்த காட்சிகளை எல்லாம் யார் கண்டுகொள்ள போகிறார்கள். ஒரு கமர்சியல் படத்தில் இந்த லாஜிக் எல்லாம் பார்க்க வேண்டுமா என்று முட்டுக் கொடுக்கலாம். ஆனால் சில நொடிகள் வரும் இந்த காட்சிகள் காலம் காலமாக பொதுபுத்தியில் பதிர்ந்திருக்கும் தவறான புரிதலை மேலும் வலுப்படுத்துகிறது. மதராஸி வட சென்னை மக்களைப் பற்றிய கதையோ வடசென்னையில் உள்ள ரவுடிகளைப் பற்றிய கதையோ இல்லை பிறகு இந்த காட்சிகளுக்கான அவசியம் என்ன. மதராஸி என பெயரில் மட்டும் இன உணர்வை வைத்துக் கொண்டு அதே இனத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட மக்களை மட்டும் குற்றவாளிகளாக ஏன் முத்திரை குத்த வேண்டும்?
இது தவிர்த்து பப் ஜி விளையாட்டால் சின்ன குழந்தைகள் துப்பாக்கியை கையிலெடுப்பது என்கிற காட்சிகள் எல்லாம் பூமர் தனத்தின் உச்சபட்சம்