நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’
சின்னத்திரையில் தனது திறமையால் ரசிகர்களிடம் புகழ் பெற்ற சிவகார்த்திகேயன் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அப்படியான சமயத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியானது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. படத்தின் டைட்டில் ஏற்கனவே வடிவேலு காமெடி மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமான நிலையில் இந்த படத்தை பொன்ராம் இயக்கி சினிமாவில் அறிமுகமானார். மேலும் ஹீரோயினாக ஸ்ரீதிவ்யா அறிமுகமாக, சூரி, சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். டி.இமான் இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
காதலிக்கும் பெண் இன்னொருவனுடன் சென்று விட்டாலும் மனம் தளரக் கூடாது என்ற கொள்கையோடு செயல்படுகிற சங்கத்தின் தலைவர் சிவகார்த்திகேயன், செயலாளர் சூரி. இதனிடையே சிவகார்த்திகேயன் டீச்சராக வரும் பிந்து மாதவிக்கு விடும் காதல் தூதுவில் வாண்டட் ஆக வந்து மாட்டிக் கொள்கிறார் ஸ்ரீ திவ்யா. அவரின் அப்பா ஊர் பெரிய மனிதரான சத்யராஜ். ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் ஸ்ரீதிவ்யாவுடன் ஊரை விட்டு ஓடி செல்ல, அவரை பழிவாங்க சத்யராஜ் துப்பாக்கியுடன் செல்ல என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதையாகும்.
அசத்திய பிரபலங்கள்
இந்த படத்தில் வேலை வெட்டி இல்லாமல் ஊருக்கும் பந்தாவாக திரியும் போஸ் பாண்டி என்னும் கேரக்டரில் சிவகார்த்திகேயனும், கோடியாக சூரியும் அசத்தியிருந்தார்கள். அதேசமயம் இவர்களை அறிமுக நாயகி ஸ்ரீதிவ்யா அசத்தியிருந்தார். ஸ்கூல் யூனிபார்மில் பார்த்த ஸ்ரீ திவ்யாவை முதல்முறை சேலையில் பார்த்ததும் சொக்கிப்போனது உண்மையில் சிவகார்த்திகேயன் மட்டுமல்ல படம் பார்க்கும் நாமும் கூடத்தான். அந்த அளவுக்கு லதாபாண்டியாக ரசிகர்களை கவர்ந்தார். சிவனாண்டியாக மிரட்டும் சத்யராஜ் என படத்தில் வருபவர்கள் எல்லாருக்கும் அழகாக காட்சிகளை அடுக்கியிருந்தார் பொன் ராம். இந்த படத்திற்கு வசனம் எழுதியிருந்தார் இயக்குநர் எம்.ராஜேஷ்.
பட்டையை கிளப்பிய பாடல்கள்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் மிகப்பெரிய பலமாக டி.இமானின் இசையில் பாடல்கள் அமைந்தது. தொடக்க பாடலான வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடலை சிவகார்த்திகேயன் பாடியிருந்தார். மேலும் ஊதா கலரு ரிப்பன், பார்க்காத பார்க்காத, கண்ணால சொல்லுற பாடல் என அனைத்தும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் வெளியான சில நாட்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் அவதிப்பட்டனர். அந்த அளவுக்கு சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் மிகப்பெரிய இடம் பிடித்தது இந்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”.
மேலும் படிக்க: Gokulashtami 2023: ”கோகுலத்து கண்ணா.. கண்ணா” .. மெய் சிலிர்க்க வைக்கும் கிருஷ்ணர் பற்றிய சினிமா பாடல்கள்..!