SK26 First Look : முருகனை கையிலெடுத்த சிவகார்த்திகேயன்...வெளியான SK26 ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்
SK26 First Look : ராஜ்கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே 26 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வெளியாகியுள்ளது

அமரன் படத்தைத் தொடர்ந்து ராஜ்கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்துள்ளார். சிவகார்த்திகேயனின் 26 ஆவது படமாக உருவாகும் இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பாக ராதிகா சரத்குமார் நடித்துள்ள தாய்கிழவி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது . இப்படத்திற்கு சேயோன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நாளை படத்தின் பூஜை சென்னையில் நடைபெற இருக்கிறது .
ராஜ்கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் உலகளவில் ரூ 300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. சிவகார்த்திகேயன் கரியரில் அதிகம் வசூல் ஈட்டிய படமாக இப்படம் அமைந்தது. அமரன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ராஜ்கமல் தயாரிப்பில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக கமல் மற்றும் டர்மெரிக் மீடியா சார்பாக மகேந்திரன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
மீண்டும் கிராமத்து நாயகனாக சிவகார்த்திகேயன்
தனது கரியரின் தொடக்கத்தில் சிவகார்த்திகேயன் கிராமத்து பின்னணிகளை கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் , சீம ராஜா ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்ததோடு சாமானிய ரசிகர்களிடம் சிவகார்த்திகேயனை பிரபலாமாக்கின. ஆக்ஷன் ஹீரோவாக மாறிய பின் சிவகார்த்திகேயன் பெரும்பாலும் மாஸ் ரோல்களையே தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கிராமத்து சப்ஜெக்ட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த படம் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களைப் போல் நகைச்சுவை ஜானரில் இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் மாஸான ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரைப் பார்க்கையில் முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்த ஒரு கிராமிய பின்னணியில் இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
முருகனை கையிலெடுத்த எஸ்.கே
முன்னதாக தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் தமிழ் கடவுள் முருகனை மையமாக வைத்து அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனடிப்படையில் ரசிகர்கள் ஒருவர் செய்து வெளியிட்ட போஸ்டர் ஒன்றும் இணையத்தில் வைரலானது. தற்போது சிவகார்த்திகேயனின் சேயோன் படமும் முருகனை மையமாக வைத்து உருவாக இருப்பது தெளிவாகியுள்ளது. அண்மை காலங்களில் தமிழ் கடவுள் முருகனை மையப்படுத்தி பல்வேறு அரசியல் காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. இப்படியான சூழலில் சிவகார்த்திகேயனின் பட அறிவிப்பு ஒரு எதிர்வினையாக வெளியாகியுள்ளது.























