சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தனக்கென ஒரு அடையாளத்தை பெற்று கொண்டு வெள்ளித்திரையில் மெல்ல தலை காட்ட துவங்கியவர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். தன்னுடைய திறமையை ஒவ்வொரு படத்திலும் மேம்படுத்தி கொண்டு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஒரு நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயரிப்பாளர் என பன்முக திறமையாளராக கலக்கி வருகிறார்.
தன்னுடைய எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் பல நல்ல படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் எஸ் கே புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'கொட்டுக்காளி'. 2021ம் ஆண்டு சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற 'கூழாங்கல்' படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் வினோத் ராஜ். அவர் தான் 'கொட்டுக்காளி' படத்தையும் இயக்கியுள்ளார்.
நடிகர் சூரி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் படத்தின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை அன்னா பென் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மிகவும் பிடிவாத குணம் கொண்ட ஒரு பெண்ணாக நடித்துள்ளார். ஆகஸ்ட் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படம் ஏற்கனவே ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றுவிட்டது. பெர்லின் உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளை குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல இயக்குநர்களின் பார்வைக்காக திரையிடப்பட்ட இப்படத்தை அவர்கள் பாராட்டியுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் டிரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. கிராமிய பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.