இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள “பராசக்தி” படம் ஜனவரி 10ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். அதேபோல் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் 100வது படமாகும். வரலாற்று கதையை அடிப்படையாக கொண்ட பராசக்தி படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. 

இப்படம் ஜனவரி 14ம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 10ம் தேதி சனிக்கிழமை இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நடிகர் விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு படங்களுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

பராசக்தி படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது. அதேபோல் ஜனநாயகன் படத்திற்கான தியேட்டர் விநியோக உரிமையை ஏரியா வாரியாக 5 நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தில் இடம்பெற்ற பொருட்கள் மக்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனைக் காண மக்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் படம் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி வரும் நிலையில் ஜனவரி 14ம் தேதி வெளியிட்டால் வசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே ஒருவாரம் முன்னதாக வெளியிட வேண்டும் என உலகளவில் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டதால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்

பொங்கல் பண்டிகை மிக நீண்ட விடுமுறை நாட்களாகும். இந்த பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் படங்களை காண குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு படையெடுப்பார்கள். இப்படியான நிலையில் தியேட்டர்கள் கிடைப்பதில் பராசக்தி, ஜனநாயகன் படங்கள் இடையே சிக்கல் எழலாம் என பேச்சு எழுந்துள்ளது. மேலும் விஜய்யின் கடைசிப்படமாக ஜனநாயகனைக் காண மக்கள் பலரும் ஆர்வமாக இருப்பார்கள் என்ற நிலையில் பராசக்தி ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது மிகப்பெரிய பேசுபொருளாக ரசிகர்களிடையே மாறியுள்ளது.