தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் கதாநாயகனாக திகழும் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மதராஸி படம் வெளியாகியது. கடந்த 5ம் தேதி மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வெளியானது. 

மதராஸி:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், சிவகார்த்திகேயன் ஹீரோ, அனிருத் இசை என்று படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பைத் தூண்டியது. முதல் நாள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் குவிந்தனர். படத்திற்காக பாசிட்டிவ் விமர்சனங்கள் இணையத்தில் குவிந்தாலும், வசூலில் எதிரொலிக்கவில்லை. பலரும் இந்த படத்திற்கான பாசிட்டிவ் விமர்சனங்கள் அனைத்தும் திட்டமிட்டு பரப்பப்பட்டதாக விமர்சித்தனர். 

உலகளவில் படம் 2 நாளில் ரூபாய் 50 கோடியை கடந்ததாக படக்குழு  அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் இந்திய அளவில் படத்தின் வசூல் நாளுக்கு நாள் தொய்வடைந்து வருகிறது. முதல் நாள் ரூபாய் 13 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாள் 12 கோடி வசூல் செய்தது. படம் வெளியான முதல் ஞாயிற்றுக்கிழமையில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ரூபாய்  11.4 கோடி மட்டுமே வசூல் செய்தது. 

ரூ.50 கோடி இன்னும் கிராஸ் பண்ணலயா?

அதன்பின்னர், வேலை நாட்களான கடந்த நாட்களில் படத்தின் வசூல் தொய்வடைந்து வருகிறது. சாக்னிக் இணையதள தகவலின் அடிப்படையில் கடந்த 6 நாட்களில் ரூபாய் 45.93 கோடி மட்டுமே மதராஸி வசூலித்துள்ளது. சென்னையில் மீண்டும் மதராஸி படத்திற்கான காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 380 காட்சிகள் திரையிடப்பட்ட மதராஸி நேற்று 440 காட்சிகள் திரையிடப்பட்டது. மதுரையில் 107 காட்சிகளும், கோவையில் 169 காட்சிகளும் திரையிடப்பட்டது. 

மதராஸிக்கு போட்டியாக களமிறங்கிய காந்தி கண்ணாடி, காட்டி, பேட் கேர்ள், கான்ஜுரிங் என படங்கள் வெளியானாலும் மற்ற படங்கள் ஏதும் ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. இதனால், திரையரங்குகளில் அந்த படங்களின் காட்சிகள் குறைக்கப்பட்டு மதராஸி படம் திரையிடப்பட்டு வருகிறது. ஆனாலும், மதராஸி படத்திற்கும் பெரியளவு ரசிகர்கள் குவியவில்லை. 

போட்ட காசு வருமா?

மலையாள படமான லோகா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால்  ரசிகர்கள் பலரும் அந்த படத்திற்கு குவிந்து வருகின்றனர். ஆக்ஷன் காட்சிகள் மதராஸி படத்தில் அருமையாக அமைந்திருந்தாலும் அந்த படம் முருகதாஸின் முந்தைய படங்களின் சாயலை பிரதிபலிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

படத்தின் வில்லன் வித்யுத் ஜம்வாலின் நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படம் ரூபாய் 180 கோடி பொருட்செலவில் உருவாகியிருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது. ஆனால், படத்தின் வசூல் நாளுக்கு நாள் தொய்வடையும் சூழலில் இந்த படம் படஜெட்டை கடந்து வசூலை குவிக்குமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.