தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்து, விஜய் - அஜித், அவர்களுக்கு பிறகு அதிகம் ஓப்பனிங் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்தான் என மல்டிபிளக்ஸ் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியிருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.




தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக இருந்து , முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் மிடில்கிளாஸில் இருந்து உயர நினைக்கும் பல இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் 10 கோடி 15 கோடியாக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் சமீபத்தில் அனுதீப் இயக்கும் புதிய படம் ஒன்றுக்கு 25 கோடியாக சம்பளத்தை மாற்றினார். தற்போது அடுத்தடுத்த படங்களுக்கு 30 முதல் 40 கோடி வரையில் சம்பளத்தை கிடு கிடுவென உயர்த்தியிருப்பதாக செய்திகள் வெளியாகின.


இதனால் அவரை விட குறைவான சம்பளம் வாங்கி வந்த சீனியர் நடிகர்களும் தங்களது சம்பளத்தை உயர்த்த இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், சிவகார்த்திகேயன் மாஸ் நடிகர்தான் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 






திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியதாவது:


“கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனை ஒப்பிட்டு சில நடிகர்கள் , சிவகார்த்திகேயன் 35 கோடி ..40 கோடி வாங்குறாரு. எங்களுக்கும் சம்பளத்தை உயர்த்துங்க அப்படினு கேட்குறாங்க. இதுல சீனியர் , ஜூனியர் என்பதெல்லாம் கிடையாது ராஜா. தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்து , விஜய் - அஜித் , அவர்களுக்கு பிறகு அதிகம் ஓபனிங் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்தான்.இதை ஒரு விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளர் அப்படிங்குற முறையில அடித்து சொல்லமுடியும். படம் ஓடுதா? ஓடவில்லையா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் விஜய்- அஜித்துக்கு பிறகு ஓபனிங் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்தான்.


மற்ற ஹீரோக்கள் யாராக இருந்தாலும் அவங்களுக்கு ஓப்பனிங் கம்மிதான். விஜய் அஜித்துக்கு பிறகு அதிக சம்பளம் வாங்குறது சிவகார்த்திகேயன்தான். ஓபனிங் இல்லாம எப்படி தருவாங்க சம்பளம் . ஓடுற குதிரை மேலதான் பணம் கட்டுவாங்க.” என்றார்.