மதராஸி திரைப்படம் சிவகார்த்திகேயனை ஒரு முழு ஆக்ஷன் ஹீரோவாக அடையாளம் காட்டியிருக்கிறது என்றே சொல்லலாம். பல விமர்சனங்களையும் கேலியையும் கடந்து இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆக்ஷன் ஹீரோவாக விரும்பும் எந்த ஒரு இளம் நடிகருக்கும் சிவகார்த்திகேயனின் கரியரில் பார்த்து தெரிந்துகொள்ள நிறைய இருக்கிறது.
நகைச்சுவை நடிகராக கிடைத்த அடையாளம்
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த காலம் முதல் தனது நகைச்சுவை திறனால் ரசிகர்களை கவர்ந்தவர் சிவகார்த்திகேயன். அவரது டைமிங் காமெடி சென்ஸ் அவரது அடையாளமாகமே மாறிவிட்டது. மெரினா , மனம் கொத்தி பறவை , கேடிபில்லா கில்லாடி ரங்கா , எதிர்நீச்சல், வருதப்பட்டாத வாலிபர் சங்கம் , என அவரது ஆரம்ப காலக்கட்ட படங்களில் நகைச்சுவை உணர்வுள்ள ஹீரோவாகவே நடித்தார். சினிமாவில் ஒரு நடிகராக அங்கீகரிக்கப்பட இந்த படங்கள் அவருக்கு பெரியளவில் கைகொடுத்தன. அதே நேரத்தில் அவரது கரியரில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர இந்த நகைச்சுவையே தடையாகவும் அமைந்தது. இதை உடைக்க அடுத்தடுத்த படங்களில் முயற்சி செய்தார்
மான் கராத்தே படம் குத்துச்சண்டையை மையப்படுத்திய படம் என்றாலும் இந்த படத்திலும் அவர் பெரும்பாலும் நகைச்சுவை நடிகராகவே நடித்தார். இப்படத்தில் அவர் எமோஷ்னலாக நடித்த ஒரு சில காட்சிகள் விமர்சனத்திற்கு உள்ளாகின.
காமெடி டூ ஆக்ஷன்
எஸ்.கே முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் ஹீரோவாக தோன்றியது துரை செந்தில்குமார் இயக்கிய காக்கி சட்டை படத்தில். ஆனால் இந்த படத்தில் சண்டைக் காட்சிகளை ரசிகர்கள் பெரியளவில் விரும்பவில்லை. 'இவர் பேசாம காமெடியே பண்ணலாம் ஆக்ஷன் செட் ஆகல' என பொதுவாக கருத்துக்கள் அவர்மீது வீசப்பட்டன. ரஜினி முருகன் படத்தில் மீண்டும் காமெடி டிராக்கிற்கு திரும்பினார். ஆனால் காக்கி சட்டை படத்திற்கு வந்த விமர்சனங்கள் சிவகார்த்திகேயனுக்கு சில பாடங்களைக் கற்றுத் தந்தன. கதைக்கு தொடர்பில்லாமல் நேரடியாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்தால் ரசிகர்கள் தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். இதனால் ஒவ்வொரு படத்திலும் கதைக்கு தொடர்பான வகையில் புதுமையான சில ஆக்ஷன் காட்சிகளை முயற்சி செய்தார். உதாரணமாக ரெமோ படத்தின் ஆக்ஷன் காட்சிகளை சொல்லலாம். சிவகார்த்திகேயன் சண்டைப் போட்டாலும் பெண் வேடத்தில் அவர் சண்டை போடுவதால் இந்த காட்சிகளை ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கினார்கள்.
இருந்தும் நேரடியான ஒரு ஆக்ஷன் ஹீரோவாக சவால்கள் இருக்கவே செய்தன. சூப்பர் ஹீரோ கதையான 'ஹீரோ' படத்தில் நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
ஆக்ஷன் அவதாரம்
2021 முதல் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களே சிவகார்த்திகேயனை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக செதுக்கிய படங்கள் என்று சொல்லலாம். இந்த படங்களை இயக்கிய இயக்குநர்களும் அவருக்கு ஒரு நடிகராக புது அடையாளத்தை கொடுத்தார்கள். தங்களது ஸ்டைலில் சிவகார்த்திகேயனை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக காட்டினார்கள். ரசிகர்கள் அதை ரசிக்கவும் செய்தார்கள். உதாரணத்திற்கு நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படம். எப்போதும் திரையில் அதிகம் பேசும் சிவகார்த்திகேயனை குறைவாக பேச வைத்தே அவருக்கு ஒரு மாஸ் இமேஜை ஏற்படுத்தி கொடுத்தது. மடோன் அஸ்வின் இயக்கிய மாவீரன் திரைப்படம் மிக தேர்ந்த தேர்ந்த முறையில் எழுதப்பட்ட ஸ்டண்ட் காட்சிகளுக்காகவே பாராட்டப்பட்டது. அமரன் படத்தில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல் எதார்த்தத்திற்கு நெருக்கமான ஸ்டண்ட் காட்சிகளை கொண்ட படம்.
மாவீரன் , அமரன் , தற்போது மதராஸி என இந்த மூன்று படங்களுக்கு இருக்கும் ஒற்றுமை என்பது மூன்று படங்களுமே ஆக்ஷன் என்கிற அம்சத்தை அந்த கதையில் இயல்பாக கொண்டிருந்தன. மூன்று படங்களிலுமே நாயகன் சண்டைப் போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். பலத்தை காட்டவோ , காட்டவோ இல்லாமல் நாயகன் சண்டை போட வேண்டும் என படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் விரும்புவதால் தான் இந்த படங்கள் வெற்றிபெற்றன. Neccessity is the mother of creation என்கிற ஆங்கில வாக்கியம் இங்கு எஸ்.கேவுக்கு சரியாக பொருந்தும். மதராஸி படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் தற்போதுள்ள சிறந்த ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவராக சிவகார்த்திகேயனை நிச்சயம் சொல்லலாம்.