கோலமாவு கோகிலா என்னும் வெற்றி படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் படைப்பில் வெளியான திரைப்படம் ; டாக்டர்’ .சிவகார்த்திகேயன் தனது SK புரொடக்‌ஷன்  நிறுவனம் சார்பில் இந்த படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்து உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க யோகி பாபு, வினய் உள்ளிட்டோர் படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். மனித கடத்தலை மையமாக வைத்து டார்க் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது. 


படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது டாக்டர். தமிழ்நாடு உட்பட உலக அளவில் வசூலில் டாக்டர் திரைப்படம் 80 கோடியைத் தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.  இப்படியே சென்றால் மிக விரைவில் 100 கோடி படங்களின் லிஸ்டில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. ஆனால் அதுவரை படம் தியேட்டரில் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் வரும் தீபாவளிக்கு சன் டிவியில் சிறப்பு திரைப்படமாக டாக்டர் ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான விளம்பரம் வெளிவரலாம் எனவும் கூறப்படுகிறது.




விழா நாட்களில் புதிய திரைப்படங்களை சேனல்கள் திரையிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு சன் டிவி டாக்டரை டிக் செய்துள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி நவம்பர் 5ம்தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் டாக்டர் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. சற்று பொறுமையாக இருந்தால் 100கோடியை படம் எட்டுமே என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 


இயக்குநர் நெல்சன் தற்போது விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். டாக்டர் படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி , பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. முன்னதாக பீஸ்ட் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் படம் தங்க கடத்தலை மையமாக வைத்து உருவாகியிருப்பதாக செய்திகள் வெளியானது. டாக்டர் படத்தின் புரமோஷனில் கலந்துக்கொண்ட இயக்குநர் நெல்சன் பீஸ்ட் அப்டேட் குறித்து கேட்ட கேள்விக்கு, டாக்டர் படம் வெளியானதும், பீஸ்ட் அப்டேட் கொடுப்போம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.