செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.

    


 


                                             


 


44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா தற்போது நேரு ஸ்டேடியத்தின் உள்ளரங்கில் நடந்து வருகிறது. இதில் தமிழக முதல்வர் நேரு ஸ்டேடியத்திற்கு வரும்போது இசைக்கப்பட்ட  “ஆளப் போறான் தமிழன்” பாடல் அனைவரையும் ஆரவாரத்தில் ஆழ்த்தியது.


தொடர்ந்து, தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இந்த வாழ்த்துப்பாடல் பாடிய குழுவில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகளான ஆராதனா சிவகார்த்திகேயனும் இணைந்து பாடினார். ஆராதனா முன்னதாக கனா படத்தில் ‘யார் இந்த தேவதை’ பாடலை சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடினார். 


 


                               


நிறைவு விழாவில் தமிழர்களின் இசை, நடனத்துடன், வெளிநாட்டு இசைகளும் இசைக்கப்பட்டன.  இதில், மகாகவி பாரதியாரின் பாடலான சின்னஞ்சிறு கிளியே பாடலை பியானோ இசைக் கலைஞர் ஒருவர் அந்தரத்தில் பறந்து கொண்டே இசைத்து பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட் சூட் உடன் வந்தார். அதன்பின்னர் நிறைவு விழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ட்ரம்ஸ் சிவமணியுடன் இவரும் ட்ரம்ஸ் வாசித்தார்.


 


சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் 44வது செஸ் போட்டி சிறப்பாக நடைபெற்றது. கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. துவக்க விழாவில் பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். துவக்க விழாவில் வெளிநாட்டவரையும் கவரும் வகையில் மிக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரவேற்புகள் கொடுக்கப்பட்டிருந்தது.


துவக்க விழாவில், மத்திய மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருடன், இயக்குனர் விக்னேஷ் சிவன், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வைரமுத்து, கார்த்தி, உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். செஸ் துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் குரலில், தமிழர் வரலாறு குறித்த ஆடியோ பின்னணியில் ஒலிக்க, அதற்கேற்றவாறு கலைஞர்கள் பெர்ஃபார்ம் செய்தனர். இதனை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.


அதோடு சதுரங்க கீதம் பாடலையும் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இதுபோக துவக்க விழாவில் வருகை புரிந்து இருந்த வெளிநாட்டினர் வழிகாட்டுவதற்கு அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தனர். வித்தியாசமான முறையிலும் புதுமையான முறையில் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற்றது வெளிநாட்டு வீரர்களையே கவர்ந்திருந்தது. 12 நாட்கள் நடைபெற்ற வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறைவு விழா இன்று, மாலை 6 மணிக்கு விழா தொடங்கியது. 


போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத காரணங்களால், அவர் கலந்துகொள்ளவில்லை