திறமை என்ற ஒன்று இருந்தால் முன்னேறிவிடலாம் என்பதற்கு உதாரணமாக வாழ்பவர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர். திருச்சியில் பிறந்த சிவகார்த்திகேயன் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே பல குரல் கலையில் குறிப்பிடத்தக்கவராக இருந்தார். அப்போதே பல பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.


இதனையடுத்து விஜய் டிவியில் நடந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை எண்ட்ரி ஆன சிவா, அதன் பின் அந்த சேனலின் செல்ல பிள்ளையானார்.




சிவகார்த்திகேயனின் திறமையை பார்த்த சேனல் நிகழ்ச்சிகளை இயக்கும் இயக்குநர் சிவாவுக்கு தொகுப்பாளர் ரோலை கொடுத்தார். அதிலும் அவர் தனது தனி முத்திரையை பதித்தார். ஹ்யூமருடனும், டைமிங்குடன் அவர் நிகழ்ச்சியை நடத்திசென்ற விதமும் பார்வையாளர்களையும் கவர்ந்தது.


இதனையடுத்து இயக்குநர் பாண்டிராஜ் மெரினா படம் மூலம் 2012ஆம் ஆண்டு ஹீரோ வாய்ப்பை கொடுத்தார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் குழந்தைகளை கவர்ந்தது. இதனால் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ஹீரோவானார் சிவா. 




சமீபத்தில் அவர் நடித்த டாக்டர் படம் நூறு கோடி ரூபாயை வசூல் செய்தது. தொகுப்பாளராக மேடையேறிய சிவகார்த்திகேயனை தற்போது பல மேடைகள் சிறப்பு விருந்தினராக வரவேற்றுக்கொண்டிருக்கின்றன. நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு முகங்களை பெற்றிருக்கிறார். மேலும், தான் எழுதிய முதல் பாடலுக்கு வந்த ஊதியத்தை தனக்கு முதல் பாடல் எழுதிய நா. முத்துக்குமாரின் குடும்பத்துக்கு கொடுத்து தான் ஒரு நல்ல நடிகன் மட்டுமின்றி நல்ல மனிதன் என்பதையும் உணர்த்தினார்.


இந்நிலையில் மெரினா படம் வெளியாகி இன்றோடு பத்து வருடங்கள் நிறைவடைகின்றன. அதன்படி, சிவகார்த்திகேயனும் கதாநாயகனாக அறிமுகமாகி பத்து வருடங்கள் நிறைவுபெற்றுள்ளன.


அதனையொட்டி அவர் வெளியிட்டிருக்கும்  அறிக்கையில், “இன்றோடு சினிமாவில் பத்தாண்டுகள். நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்தப் பயணம்.




இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த இடம் நான் நினைத்துப் பார்த்திராத நிஜம். இந்த தருணத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குநர் பாண்டிராஜுக்கும், அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் உடன் நின்று பயணித்த இயக்குநர்களுக்கும் தன்னோடு சேர்த்து என்னையும் மிளிரச் செய்த என் சக கலைஞர்களுக்கும், என் படங்களில் பணியாற்றிய அத்தனை தொழிலாளர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும், நண்பர்களுக்கும், அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


 






எல்லாவற்றிற்கும் மேலாக, என் தாய்த் தமிழுக்கும், என்னை மகனாக, சகோதரனாக, நண்பனாக, குடும்பமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கும், என் ஆரம்பகாலம் முதல் என்னுடைய வெற்றி - தோல்வி அனைத்திலும் உடனிருந்து என்னை கொண்டாடும் ரசிகர்களான என் சகோதர, சகோதரிகளுக்கும் பெரும் நன்றிகள்.




எப்போதும் நான் செய்ய நினைப்பதெல்லாம் இன்னும் கடினமாக உழைத்து உங்களை மகிழ்விப்பதும், நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வை பிறருக்கும் பயன்படுமாய் வாழ்வதும் மட்டுமே!!


என் இதயத்தின் ஆழத்தில் இருந்து அன்பும் நன்றிகளும்” என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண