தோற்றம், பாவனை, உடல்மொழி என தமிழ் சினிமாவின் ஹீரோவுக்கான வரையறையில் எந்த இடத்திலும் பொருந்திப் போகாத ஒரு ”பெர்ஃபாமர்”, தொலைக்காட்சி டூ சினிமா பயணித்து, அதற்கேற்றபடி தன்னைக் கட்டமைத்து, இன்று டாப் 10 நடிகர்களில் ஒருவராகவும் உச்ச நட்சத்திரமாகவும் மாறி தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ளார்.


நம்பிக்கை நட்சத்திரம்





சின்னத்திரை வீரியம் கொண்டு நம் ஊர் வீடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கிய காலம் முதல் கனவுகளை சுமந்து கொண்டு பல நடிகர்கள் தொலைக்காட்சி எனும் ஏணி வழியே வண்ணத்திரைக்கு வந்துள்ளார்கள், சென்றுள்ளார்கள், இன்னும் பலர் முயன்று கொண்டிருக்கிறார்கள் அல்லது எதிர்பார்த்த கவனம் பெறாமல் மீண்டும் தொடங்கிய இடத்துக்கே சென்றுள்ளார்கள்.


ஆனால் தன் கடும் உழைப்பால் இவற்றுக்கெல்லாம் விதிவிலக்காக மாறி, இன்று சினிமா கனவுகளுடன் சென்னை வந்திறங்கும் ஏராளமான இளைஞர்களுக்கு உத்வேகமாகவும் நம்பிக்கை அளிக்கும் வகையிலும் தன் கரியரை செதுக்கி கோலிவுட்டின் மாவீரனாக உருவெடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.


மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்


2007இல் குழந்தை முகத்துடன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக விஜய் டிவியில் தன் பயணத்தை சிவகார்த்திகேயனைப் பார்த்தவர்கள் அவர் இந்த இடத்துக்கு வருவார் என நிச்சயம் நம்பியிருக்க மாட்டார்கள்.


ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் தனதாக்கி அன்று தொடங்கியே தன் பாதையை மிகத் தெளிவாக கட்டமைத்து வந்துள்ளார் சிவகார்த்திகேயன். எந்தப் பின்புலமும் இல்லாத அவருக்கு பெரும் பக்கபலமாக விளங்கியது விஜய் டிவி. எனினும் ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, அது இது எது என தனக்கு அளிக்கப்பட்ட அத்தனை வாய்ப்புகளையும் முழு முயற்சியுடன் கையிலெடுத்து, மிமிக்ரி தாண்டி நடனம், நடிப்பு, மக்களை ஈர்க்கும் ஆற்றல் என அனைத்திலும் கற்றுத்தேர்ந்தார் சிவகார்த்திகேயன்.


அசுர வளர்ச்சி


ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், எஸ்.ஜே.சூர்யா என தான் ஹோஸ்ட் செய்த நிகழ்ச்சிகளில் நடுவர்களாக பங்கேற்ற திரைக் கலைஞர்களை தனது திறமையாலும் சேட்டையாலும் கட்டிப்போட்டார் சிவகார்த்திகேயன்.


2012ஆம் ஆண்டு மெரினா படம் மூலம் சினிமாவில் நுழைந்தவர் வழக்கம்போல் ஓரிரு படங்களில் தொலைக்காட்சிக்கு மீண்டும் மூட்டையைக் கட்டுவார் என ஆரூடம் சொன்னவர்கள்  மத்தியில் மிகக் கவனமாக படங்களைத் தேர்வு செய்தார். போட்டி, பொறாமை மண்டிய சினிமா வட்டாரத்தில் சிறப்பான நட்பு வட்டத்தை தொலைக்காட்சி நாள்கள் முதலே உருவாக்கி வந்த சிவகார்த்திகேயனுக்கு நண்பர்களும் பக்கபலமாக அமைந்தனர்.




அதன் பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என சரியான பரிச்சார்த்த முயற்சிகளில் அடுத்தடுத்து இறங்கி தனக்கான ஆடியன்ஸைத் தேர்ந்தெடுத்து வெற்றி சூட்சமத்தை தனதாக்கினார்.


தன் ஸ்டைலில் வெற்றி ஃபார்முலா!


இதற்கு பிறகான கடந்த 10 ஆண்டுகாலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன் ரசிகர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு படங்கள் நடிப்பதுடன், தொலைக்காட்சி உலகில் செய்ததைப் போல், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என அனைத்தையும் தன் ஸ்டைலில் எஸ்ப்ரிமெண்ட் செய்தும் வெற்றி ஃபார்முலாவுக்கு அவற்றை மாற்றியும் தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 




பெரும் பின்புலமின்றி சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணித்து பாலிவுட் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்த ஷாருக்கானின் திரை வாழ்வு போல், கடந்த 10 ஆண்டுகளில் கோலிவுட் சினிமாவில் நாலு கால் பாய்ச்சலில் சிவகார்த்திகேயன் அடைந்துள்ள இடம் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியது.


தான் இயங்கும் துறையில் தன் ஸ்டைலிலேயே பிரத்யேகமாக வெற்றி ஃபார்முலாவை உருவாக்கி ப்ரின்ஸாக வலம் வரக் கற்றுக் கொடுத்து சினிமாவில் நுழைபவர்களுக்கு உத்வேகமூட்டும் வகையில் பயணிக்கும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.