அயலான்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் (Ayalaan) திரைப்படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அயலான் படத்தின் இசைவெளியீடு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட படக்குழுவினர் அயலான் படம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
ஏ.அர் ரஹ்மான்
இதுவரை அயலான் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கின்றன. வேற லெவல் சகோ, அயலா அயலா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. அயலான் படத்தின் இசை நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்காக தான் 5 மடங்கு வேலை செய்ய வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் ஹாலிவுட்டில் வெளியான ஃபாஸ்ட் & ஃபியூரியஸ், டிரான்ஃபார்மர்ஸ் மாதிரியான படங்களின் தரத்தில் அயலான் படம் உருவாகியுள்ளதாக ரஹ்மான் தெரிவித்தார்.
அயலான் 2
கடந்த 2016ஆம் ஆண்டு அயலான் படத்தின் அறிவிப்பு வெளியாகியது. பொருளாதார நெருக்கடிகள் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்டு கொண்டே சென்றுள்ளது. மேலும் இந்தப் படத்தின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளில் எந்த விதமான சமரசமும் செய்துவிடக்கூடாது என்பதனால் தங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருந்தார். மேலும் அயலான் இசை நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ரவிகுமார், அயலான் படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்கவில்லை என்றும் கூறினார். மேலும் இந்தப் படத்தை முடிப்பதே தனது நோக்கமாக இருந்ததாகவும், தானும் இந்தப் படத்திற்கு சம்பளம் வாங்கவில்லை என்றும் தெரிவித்தார். அவ்வப்போது தன்னுடைய அன்றாட செலவுகளுக்கு தேவையான பணத்தை மட்டும் தான் கேட்டு பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
அயலான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை தான் சிவகார்த்திகேயனிடம் தெரிவித்து ஓகே வாங்கிவிட்டதாகவும், முதல் பாகத்தை மக்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டு இரண்டாம் பாகத்தை தான் எடுக்க இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் இரண்டாம் பாகத்தை மிகப்பெரிய பட்ஜட்டில் மட்டுமே எடுக்க முடியும் என்றும் முதல் பாகத்தில் வி.எஃப் எக்ஸுக்கு ஆன செலவைவிட 4 மடங்கு அதிகம் செலவு இரண்டாம் பாகத்திற்கு ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.