அயலான்


ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இன்று நேற்று நாளை படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சைன்ஸ் ஃபிக்‌ஷன் படத்தை ரவிகுமார் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏலியன் ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் ஏலியனுக்கு டப்பிங் பேசி இருப்பது கூடுதல் சிறப்பு.


தடைகளைத் தாண்டி திரையரங்கில்


படப்பிடிப்பு தொடங்கிய காலத்தில் இருந்தே பல்வேறு சவால்களை சந்தித்து வந்துள்ளது அயலான் திரைப்படம். கொரோனா, பொருளாதாரா நெருக்கடிகள் என அனைத்தையும் சமாளித்து படக்குழு ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸை முடிவு செய்தது. கடைசி நேரம் வரை ஒரு சில பணப் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக தகவல்கள் வெளியானதால் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமா என்கிற கேள்வி இருந்து வந்தது. இப்படியான நிலையில் தற்போது திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது அயலான் திரைப்படம். 


பாராட்டுக்களைப் பெறும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள்










அயலான் படத்தின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அயலான் படத்தில் தொழில்நுட்பரீதியாக எந்த வித சமரசத்தையும் படக்குழு செய்யவில்லை என்று ப்ரோமோஷன்களில் பேசினர். தற்போது அதற்கு ஏற்ற வகையில் அயலான் படத்தின் வி எஃப் எக்ஸ் காட்சிகள் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன.


மேலும் இந்த பாராட்டுக்கு உச்சமாக பிரபல ஒளிப்பதிவாளரும் அயலான் படத்தில் பணியாற்றியவருமான நிரவ் ஷா வெகுவாக படத்தைப் பாராட்டியுள்ளார். அயலான் படத்தில் இந்தியாவில் எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு சிறந்த வி.எஃப் .எக்ஸ் காட்சிகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 


பொங்கல் வெளியீடு


தமிழில் கேப்டன் மில்லர், மெரி கிறிஸ்துமஸ், மிஷன் சாப்டர் 1, தெலுங்கில் குண்டூர் காரம், அனுமன் உள்ளிட்ட படங்கள் இன்று வெளியாகியுள்ளன.